திருவனந்தபுரம், கேரளாவில், பெண் டாக்டரை கைதி குத்திக் கொன்ற சம்பவம் நடந்த இரு நாட்களிலேயே, போலீசார் அழைத்துச் சென்ற போதை சிறுவன் ஒருவன், பெண் மாஜிஸ்திரேட்டை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
போராட்டம்
கேரளாவின் கொட்டாரக்கரை மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் டாக்டர் வந்தனாவை, போலீசார் அழைத்துச் சென்ற விசாரணை கைதி சந்தீப் கத்திரிக்கோலால் குத்திக்கொன்றார்.
இச்சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
‘இச்சம்பவம் மாநில அரசின் தோல்வி’ என அம்மாநில ஐகோர்ட், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., அரசை கண்டித்தது.
டாக்டர்கள் இச்சம்பவத்தை கண்டித்து நாடு முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் போதைக்கு அடிமையாகி, செலவுக்கு பணம் கேட்டு வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக பெற்றோர் கொடுத்த புகாரின்படி, ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
அவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்க, பெண் மாஜிஸ்திரேட் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
சீர்திருத்தப்பள்ளி
அங்கு மாஜிஸ்திரேட் விசாரித்துக் கொண்டிருந்த போது, சிறுவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்த முயன்றான்.
இதைப் பார்த்து, மாஜிஸ்திரேட் மற்றும் சிறுவனின் தாயார் அலறவே, போலீசார் சிறுவனை வெளியே துாக்கிச் சென்றனர்.
பின், அச்சிறுவன் இரவோடு இரவாக சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான்.
இது குறித்து பெண் மாஜிஸ்திரேட் மாவட்ட நீதிபதிக்கு தகவல் தெரிவித்தார். கேரள ஐகோர்ட்டுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டது.
இதற்கிடையே, விசாரணை கைதியை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்துவதற்கு முன், அவரை போலீசார் பரிசோதனை செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்