சென்னை: முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், இன்னொரு தகவலும் கோட்டையில் வட்டமடித்து கொண்டிருக்கிறது
நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றுள்ளதால், அவருக்கான செயலர் பதவிக்கு உதயசந்திரன் நியமிக்கப்படுகிறார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலும் வெளியாகி உள்ளது.
உதயச்சந்திரன்: உதயச்சந்திரன் மாற்றம் குறித்து ஏற்கனவே சில தகவல்கள் கசிந்தன.. வழக்கமாக, தமிழக அரசின் ஒவ்வொரு துறைகளுக்கும் செயலாளர்கள் இருப்பார்கள்.. அந்தவகையில், முதல்வரின் கீழ் உள்ள தனிச்செயலாளார்களுக்கு அந்த துறைகளை பிரித்துக் கொடுப்பது மரபாக இருந்து வருகிறது.. துறைகளின் செயலாளர்களும், அந்தந்த தனிச்செயலாளர்களிடம் ஆலோசித்து செயல்படுவர். அந்தவகையில், உதயச்சந்திரனிடம் முக்கியத்துறைகள் இருக்கின்றன.. மேலும் ஐஏஎஸ் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.
மற்ற தனிச்செயலர்களிடமும் சில துறைகள் இருக்கிறது என்றாலும், அனைத்து துறையின் செயலாளர்களும் முதல்வரை நேரடியாகவே சந்திக்கும் சூழல் உதயசந்திரனுக்கே உண்டு.. அதிலும் அடிக்கடி சந்தித்து, முதல்வரிடம் ஆலோசிப்பதால், இது பலரது கண்ணை உறுத்தியதாக சலசலக்கப்பட்டது.. அதுமட்டுமல்ல, ஸ்டாலின் என்ன அறிவித்தாலும், அதுக்கெல்லாம் உதயச்சந்திரன்தான் என்ற பொறுமலும் வெடித்தபடியே இருந்தன..
உறுத்தும் கண்கள்: காரணம், உதயச்சந்திரன் பொறுப்பேற்றதுமே சில முக்கிய நடைமுறைகள் கோட்டையில் அரங்கேறின. குறிப்பாக, ஒவ்வொரு துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த அப்டேட்களை உடனுக்குடன் போர்டில் பதியவேண்டும என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தபடியே இருந்தார்.. காரணம், இந்த போர்டில் உள்ள அப்டேட்டுகளை பார்த்துதான், திட்டங்களின் தற்போதைய நிலைமை என்பதை அறிந்து கொள்வார்.. இப்படி ஒரு ஐடியாவை கொண்டு வந்ததும் உதயச்சந்திரன்தான்.. இந்த முன்னெடுப்பும் சில அமைச்சர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
இதன்காரணமாகவே தன்மீது சிலர் தேவையில்லாத புகார்களை வாசிக்க தொடங்கியுள்ளனர் என்பதை உதயச்சந்திரன் அறியாமல் இல்லை.. எனினும், இந்த புகார்கள், குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க உதயச்சந்திரன் நினைத்தாராம்.. இதற்காகத்தான், ஒருகட்டத்தில், ஏதேனும் ஒரு துறையில் தன்னை செயலாளராக நியமிக்க வேண்டும் என்று நேரடியாகவே முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டதாகவும், இதற்கு ஸ்டாலினும் ஓகே சொல்லிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
புகார்கள்: இப்படிப்பட்ட பின்னணி சூழலில்தான், நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றுள்ளதால், அவருக்கான செயலர் பதவிக்கு உதயசந்திரன் நியமிக்கப்படுகிறார் என்கிறார்கள்..
மிகச்சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர், சமூக பொறுப்பாளர் என்ற பல்வேறு அடையாளங்களை உதயச்சந்திரன் பெற்றுள்ள நிலையில், அவருக்கான ஆதரவுகள் அதிகமாகவே உள்ள நிலையில், புதிய பதவிக்கான அறிவிப்பு விரைவில் வரும் என்றே தெரிகிறது. இதனிடையே, இன்னொரு தகவலும் கசிந்துள்ளது..
ஐஏஎஸ் அதிகாரிகள்: அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்தும், முதல்வரின் செயலாளர் உதயசந்திரனுக்கு எதிரான குரல் வெளிப்படையாக வெடித்திருக்கும் சூழலிலும், உயரதிகாரிகள் உட்பட, ஐஏஎஸ் அதிகாரிகள் பலரையும் கொத்தாக மாற்றம் செய்வது குறித்து இரவு முழுவதும் பல கட்ட ஆலோசனைகளை நடத்தி முடித்திருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்… துறையின் செயலாளர்கள் உட்பட மாவட்ட கலெக்டர்கள் சிலரும் மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் கோட்டை தரப்பினர். எனவே, ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகாரிகள் மத்தியில் எகிறிக்கொண்டிருக்கிறது.