`மகனை விடுவிக்க ஷாருக் கானிடம் ரூ.25 கோடி லஞ்சம்?' – ஆர்யன் கானைக் கைதுசெய்த சமீர் மீது ஊழல் வழக்கு

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான், 2021-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கப்பலில்வைத்துக் கைதுசெய்யப்பட்டார். மும்பையிலிருந்து கோவாவுக்குச் சென்ற கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கானும் அவருடைய நண்பர்களும் கைதுசெய்யப்பட்டனர். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை அதிகாரி சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள்தான் இந்த ரெய்டில் ஈடுபட்டனர். ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்டபோது அவரை போதைப்பொருள் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க சமீர் வான்கடே கோடிக்கணக்கில் பணம் கேட்பதாகப் புகார் எழுந்தது. ஆனால் இந்தப் புகாரை அவர் மறுத்து வந்தார். ஆனால் அடுத்த சில மாதங்களில் சமீர் வான்கடே, ஆர்யன் கான் வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதோடு போதைப்பொருள் தடுப்புப் பிரிவிலிருந்தும் விடுவிக்கப்பட்டு சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

ஷாருக் கான், ஆர்யன் கான்

சமீர் வான்கடே விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால் ஆர்யன் கான் வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், போதிய சாட்சியம் இல்லை என்று கூறி ஆர்யன் கானும் இந்த வழக்கிலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், புதிய திருப்பமாக சமீர் வான்கடே மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின்கீழ் சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்திருக்கிறது. ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் சிக்கவைக்காமல் இருக்க சமீர் வான்கடே ஷாருக் கானிடம் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக சி.பி.ஐ தனது முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டியிருக்கிறது. அதோடு மும்பை, டெல்லி, ராஞ்சி, கான்பூர் போன்ற இடங்களில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியது.

சமீர் வான்கடே மட்டுமல்லாது இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 அதிகாரிகளின் வீடுகளிலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. ஆர்யன் கான் வழக்கோடு தொடர்புடையவர்களின் 29 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் நடந்து 18 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், திடீரென சமீர் வான்கடே மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யமளிப்பதாக இருக்கிறது.

ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்டபோது இதில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்த கோஷாவி என்பவர், சமீர் வான்கடே சார்பாக ஷாருக் கானிடம் ரூ.25 கோடி கேட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து கோஷாவியின் பாதுகாவலர் தனது வாக்குமூலத்தை அறிக்கையாகவும் கொடுத்திருக்கிறார். அப்போது அமைச்சராக இருந்த நவாப் மாலிக்கும் இது தொடர்பாக சமீர் வான்கடே மீது குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அவற்றை சமீர் வான்கடே மறுத்திருந்தார். சமீர் வான்கடே சமீபத்தில் நாக்பூருக்குச் சென்று ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். அதோடு தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க-வில் சேரப்போவதாகவும் செய்தி வெளியானது.

சமீர் வான்கடே

கடந்த சில நாள்களுக்கு முன்புதான் விஷ்வ விஜய் என்ற போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி பணியிலிருந்து நீக்கப்பட்டார். விஷ்வ விஜய்யும் ஆர்யன் கான் கைது விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரியாவார். ஏற்கெனவே வேறு ஒரு வழக்கில் விஷ்வ விஜய் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அவர் தற்போது பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அதோடு அவர்மீது இலாகா பூர்வ விசாரணையும் நடந்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.