Sidda is the next Chief Minister of Karnataka? Shiva? Priyank? | கர்நாடகாவில் அடுத்த முதல்வர் சித்தா? சிவா? பிரியங்க்?

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலையில் காங்., கட்சி “அலர்ட்” ஆகி உள்ளது. கட்சியில் அடுத்து எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து ஆலோசிக்க காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் முக்கிய ஆலோசனை நடக்கிறது. இதற்கிடையே கர்நாடகா, தமிழகம் , புதுடில்லி மற்றும் பல்வேறு காங்., அலுவலகங்களில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட துவங்கி உள்ளனர்.

கர்நாடக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று மாலைக்குள் ஓரளவுக்கு யார் எத்தனை தொகுதிகள் பெறுவர் என்பது தெரிந்து விடும். தற்போதைய சூழலில் காங்கிரஸ் 115க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பா.ஜ., 70க்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் காங்., ஆட்சி அமைக்கும் என்ற சூழல் உருவாகி உள்ளது.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா இன்று அளித்த பேட்டியில் கர்நாடகாவில் காங்கிரஸ் பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சியை அமைக்கும், பிரதமர் மோடியின் எதிர்மறை அரசியல் எடுபடாது என்றார்.

முழு தேர்தல் முடிவுகள் வந்ததும் , எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் யாரை முதல்வராக தேர்வு செய்வது என்ற கோஷ்டி சண்டை காங்கிரசில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாற்று கட்சியினர் காங்., எம்எல்ஏ.,க்களை யாரும் கடத்தி சென்று விடக்கூடாது என்பதிலும் கட்சி நிர்வாகிகள் உஷார் ஆகியுள்ளனர்.

முதல்வர் பட்டியலில் தற்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்., தலைவர் சிவக்குமார், ஜெகதீஷ் ஷெட்டர், கார்கே மகன் பிரியங்க் ஆகியோர் உள்ளனர். சித்தராமையா மகன் யதேந்திர சித்தராமையா இன்று நிருபர்களிடம் பேசுகையில் ” எனது தந்தையே அடுத்த முதல்வர் ” என முதல் குரல் கொடுத்துள்ளார். சிவக்குமாரும் ஒரு லட்சத்திற்கும் மேலான ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரும் இன்று தனது இல்லத்தில் தொண்டர்களுடன் வெற்றியை பகிர்ந்து கொண்டார். இவர் தனது ஆதரவாளர்களை தூண்டி விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரும் பட்சத்தில் காங்கிரசுக்கு தலைவலி வரும் . எப்படி சமாளிக்க போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

சொகுசு விடுதிக்கு ஏற்பாடு

வெற்றி பெற்று வரும் காங்., எம்எல்ஏ.,க்கள் யாரும் கட்சி மாறிவிடக்கூடாது என்பதற்காக அனைத்து எம்எல்ஏ.,க்களையும் பெங்களூரு வரச்சொல்லி தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென சொகுசு விடுதி தயாராகிறது. ஆளும் பா.ஜ., கட்சியில் முக்கிய பிரமுகர்கள் உள்பட 8 அமைச்சர்கள் தோல்வி முகத்தில் உள்ளனர்.

வெற்றிக்கு காரணம் என்ன ?

கர்நாடகாவில் காங்கிரசின் வெற்றிக்கு சில முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. இதில் குறிப்பாக ராகுல் எம்பி பறிபோனது சற்று பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் பா.ஜ., வின் எம்எல்ஏக்கள் சிலர் ஊழல் விவகாரத்தில் சிக்கினர், இதுவும் சற்று பாஜ.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. காங்., வாக்குறுதியில் பஜ்ரங்தள் அமைப்பை தடை செய்வோம் என்ற தேர்தல் வாக்குறுதி காங்கிரசுக்கு எதிராக பா.ஜ., கையாண்ட விதம் எந்த அளவுக்கு சாதகத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது வெளிப்படையாக தெரியாத நிலையே இருந்தது. பெருவாரியான லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா நீக்கம், தொடர்ந்து முதல்வர் பொம்மை நிர்வாகத்தில் பெரும் திருப்தி இல்லை என்றும் சொல்லப்படுகிறது. மொத்தத்தில் பா.ஜ.,வுக்கு பிரதமர் மோடியின் பிரசாரம் மட்டுமே பெரும் உந்துதலாக இருந்தது என்று சொல்லலாம்.

பொதுவாக கர்நாடக மக்கள் எந்தவொரு ஆட்சியும் மீண்டும் வர விரும்ப மாட்டார்கள், மாறி, மாறியே தான் ஓட்டளிப்பர் . மேலும் மெஜாரிட்டி இல்லாமல் இருந்தால் நிலையான ஆட்சியும் அங்கு நிலைக்காது. கடந்த கால வரலாற்றில் இது நிகழ்ந்திருக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.