சென்னை: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வரும் நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
கர்நாடகாவில் கடந்த மே 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பாஜக, காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளும் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்து தேர்தல் பிரச்சாரங்களில் இறங்கின.
இதன் காரணமாக கர்நாடகாவில் மும்முனைப் போட்டி நிலவியது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளின்படி பார்த்தால் பெரும்பான்மை பலத்துடன் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்று தனித்து ஆட்சியமைக்கும் என்றே கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அன்றைய தினம் மாலை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வென்றாலும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெறாது என்றே தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு மீண்டும் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
காங்கிரஸுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்று டைம்ஸ் நவ், இந்தியா டுடே உள்ளிட்ட சில ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. இந்த நிலையில்தான் இன்று காலை பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் கர்நாடகா மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பாஜகவே முன்னிலை வகித்ததாக கூறப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதிலும் முதல் 30 நிமிடங்களுக்கு மேல் பாஜகவே முன்னிலையில் உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால், அடுத்தடுத்த சுற்று முடிவுகளில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் முன்னேற தொடங்கியது. தற்போது வரை காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 119 இடங்களிலும், பாஜக 72 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 26 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வரப்போவதை முன்கூட்டியே கணித்து இருந்த காங்கிரஸ் விமரிசையான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து இருந்தது. அதன்பேரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி காங்கிரஸ் முன்னிலை என்ற அறிவிப்பு வெளியான உடனே டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கின்றன.
மறுபக்கம் டெல்லி தீன் தயாள் உபாத்யாய் பகுதியில் அமைந்து இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தை நோக்கினால், அது வெறிச்சோடிக் காட்சித் தருகிறது. பொதுவாக நாடாளுமன்ற மற்றும் சட்டசபைத் தேர்தல்களின்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தொண்டர்கள் புடைசூழ பாஜக தலைமையகம் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
ஆனால், இன்று காலை முதலே ஆட்கள் நடமாட்டமின்றி இருக்கிறது. ஏற்கனவே தேர்தல் முடிவுகள் பற்றி பாஜக ஓராளவு யூகித்து இருந்ததால் ஏற்பாடுகளை செய்யவில்லை என்றும், இதுவரை பாஜக தலைவர்கள் கூட டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்துக்கு வரவில்லை எனவும் கூறப்படுகிறது.