பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கடுமையாக முயற்சி செய்தும் எங்களால் போதிய எண்ணிக்கையில் வெற்றி பெற முடியவில்லை என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மே 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பகல் 1.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 64 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இந்தநிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கடுமையாக முயற்சித்தும் போதிய எண்ணிக்கையில் வெற்றி பெற நாங்கள் தவறி விட்டோம். தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு முடிவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும். இந்த முடிவினை வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாடமாக ஏற்றுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.