பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 126 தொகுகளில் முன்னிலை வகித்து வருகிறது. 10 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
மதியம் 2 மணி நிலவரம்: மதியம் 2 மணி நிலவரப்படி, காங்கிஸ் கட்சி 126 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மொத்தம் 136 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பை அக்கட்சி பெற்றுள்ளது. பாஜக 60 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஒரு தொகுதியில் வெற்றியை உறுதி செய்துள்ளது. மற்றவை 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
பசவராஜ் பொம்மை பேட்டி: தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, “பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கடுமையாக முயற்சித்தும் எங்களால் போதிய எண்ணிக்கையில் வெற்றி பெற முடியவில்லை. தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு அதுகுறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும். இந்த முடிவினை வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாடமாக ஏற்றுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கொண்டாட்டம்: பாஜகவை பின்னுக்குத் தள்ளிய காங்கிரஸ். தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியபடியே, தேர்தல் முடிவுகள் குறித்த முன்னணி நிலவரங்கள் உள்ளன. பாஜகவைவிட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை நோக்கி காங்கிரஸ் முன்னேறி வருகிறது. இதையடுத்து, கர்நாடகாவிலும், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் நடனமாடி தங்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர்.
தேர்தல் பின்னணி: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் போட்டியிட்டன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.