கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றி குறித்து டெல்லியில் உள்ள
காங்கிரஸ்
தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, கர்நாடகா தேர்தலில் வெற்றிக்கு உழைத்த கட்சி தலைவர்களுக்கு பாராட்டுகள். என் இதயத்தில் இருந்து அம்மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றிருக்கிறது. நாங்கள் ஏழை மக்களுக்கான பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தோம்.
கர்நாடகா தேர்தல் முடிவுகள் 2023
வெறுப்புணர்வின் கதவுகள் மூடப்பட்டு விட்டன. அன்பின் கதவுகள் கர்நாடகாவில் திறக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஐந்து முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தோம். அவற்றை முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே நிறைவேற்றுவோம் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் கர்நாடகா மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிகரமாக அமைந்துள்ளது. முன்னதாக கடந்த 10ஆம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.
பாஜக vs காங்கிரஸ்
தபால் ஓட்டுகளில் பாஜக முன்னிலை பெற்றது. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணிய போது களம் மாறத் தொடங்கியது. காங்கிரஸ் முன்னிலை பெறத் தொடங்கியது. பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையிலான வித்தியாசம் 10, 20 என அதிகரித்து கொண்டே சென்றது. நண்பகலுக்குள் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களை காங்கிரஸ் தாண்டியது.
மேஜிக் நம்பர் 113
சில மணி நேரம் மேஜிக் நம்பரை ஒட்டியே முடிவுகள் வெளியாகி வந்தன. அதன்பிறகு காங்கிரஸின் வேகம் அதிகரித்தது. 120, 130 என மிரள வைத்தது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி காங்கிரஸ் 137, பாஜக 63, மதச்சார்பற்ற ஜனதா தளம் 20, மற்றவை 4 என முன்னிலை பெற்றுள்ளன. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியான தகவலின்படி, காங்கிரஸ் 55 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் 137 இடங்கள்
80 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 22 இடங்களில் வென்றுள்ளது. 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 10 இடங்களில் வென்று, 10 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மற்றவர்கள் 2 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றனர். எனவே காங்கிரஸ் 137 இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.
34 ஆண்டுகால வரலாறு
இதன்மூலம் 1989க்கு பின்னர் அதிக இடங்களில் காங்கிரஸ் கைப்பற்றுவது இதுவே முதல்முறை ஆகும். அப்போது 178 தொகுதிகளில் வென்று புதிய வரலாறு படைத்திருந்தது. அதன்பிறகு 1999ல் 132 இடங்களையும், 2008ல் 110 இடங்களையும், 2013ல் 122 இடங்களையும் பெற்றிருந்தனர். இதன்மூலம் 34 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி, கர்நாடகா அரசியலில் புதிய வரலாறு படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.