புதுடெல்லி: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி குறித்து பேசிய ராகுல் காந்தி கர்நாடகாவின் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு அன்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில் காங்கிரஸ் பெரும்பான்மைக்கும் அதிகமான பலத்தோடு ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா தேர்தலில் காங்கிரசின் வெற்றி குறித்து மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பெரும் முதலாளிகளை எளிய மக்கள் வீழ்த்தியுள்ளனர். கர்நாடகாவில் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு, அன்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. வெறுப்பரசியலை கையிலெடுக்காமல் அன்பின் அடிப்படையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ளது. கர்நாடகா மக்களுக்கு நாங்கள் 5 வாக்குறுதிகளை கொடுத்திருந்தோம். முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இந்த யுத்தத்தில் நாங்கள் வெறுப்பைக் கொண்டு சண்டையிடவில்லை. அன்பின் மூலம் சண்டையிட்டோம். இந்த தேசம் அன்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை கர்நாடக மக்கள் நிரூபித்துள்ளனர். மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நான் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியையும் வாழ்த்துகளையும் கூறிக் கொள்கிறேன்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.