Why the ban on The Kerala Story? Supreme Court Notice! | தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை ஏன்? மே.வங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

புதுடில்லி, தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதித்ததற்கான காரணத்தை கேட்டு, மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மேலும், இப்படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கும்படி, தமிழக அரசுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

மறுப்பு

இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான தி கேரளா ஸ்டோரி படம், கடந்த 5ம் தேதி நாடு முழுதும் வெளியானது.

மேற்கு வங்கத்தில் இப்படத்திற்கு அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி தடை விதித்தார்.

இதே போல், தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட தமிழக அரசு தடை விதிக்கவில்லை என்றாலும், இப்படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதை எதிர்த்து, தி கேரளா ஸ்டோரி படத் தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

பாதுகாப்பு

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

நாடு முழுதும் எந்த பிரச்னையும் இன்றி தி கேரளா ஸ்டோரி படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் போது, இப்படத்திற்கு மேற்கு வங்க அரசு மட்டும் தடை விதித்தது ஏன்?

படத்தின் நன்மதிப்புக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது நல்லதாகவும் இருக்கலாம்; கெட்டதாகவும் இருக்கலாம். படத்தை பார்க்கலாமா அல்லது வேண்டாமா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்.

இப்படத்திற்கு தடை விதித்ததற்கான காரணத்தை, மேற்கு வங்க அரசு விளக்க வேண்டும்.

இதே போல், தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரையிடப்படும் திரையரங்குகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து, அம்மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

திரையரங்குகள் தாக்கப்படுவதை, அரசு வேடிக்கை பார்க்க முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.