சென்னை: ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.
இந்தப் படத்தில் ஒரேயொரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த விவேக், மனோபாலா இருவருமே தற்போது உயிருடன் இல்லை.
இதில் இதுவரை பார்த்திடாத விவேக்கை இந்தியன் 2-வில் பார்க்கலாம் என பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2-வில் இதுவரை பார்க்காத விவேக்:கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகள் இடைவெளிவிட்டு தொடங்கிய இந்தியன் 2 ஷூட்டிங், தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதனால் விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் 2 படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அதேபோல் மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு ஆகியோரும் இந்தியன் 2 படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூன்று பேருமே அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டதால், அவர்களது காட்சிகள் நீக்கப்படுமா என சந்தேகம் எழுந்தது.
ஆனால், விவேக்கின் காட்சிகள் எதுவும் கண்டிப்பாக நீக்கப்படாது என கமல்ஹாசனும் இயக்குநர் ஷங்கரும் தெரிவித்திருந்தனர். இப்போது அவர்களைத் தொடர்ந்து நடிகர் பாபி சிம்ஹாவும் இதுகுறித்து சமீபத்திய பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில், நூறு சதவீதம் உறுதியாக சொல்கிறேன் இந்தியன் 2 படத்தில் மறைந்த நடிகர் விவேக்கின் காட்சிகள் எதுவும் நீக்கப்படவில்லை. இதுவரை நீங்கள் காணாத விவேக் சாரை இப்படத்தில் பார்க்கலாம் என உற்சாகமாகக் கூறியுள்ளார்.
இதனால், இந்தியன் 2 படத்திலும் கண்டிப்பாக விவேக்கின் அக்மார்க் ட்ரீட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ், அந்நியன், சிவாஜி போன்ற படங்களில் நடித்துள்ள விவேக், இதுவரை கமலுடன் மட்டும் இணைந்து நடிக்கவில்லை. இதனிடையே இந்தியன் 2 படத்தில் ந்டித்து வந்த விவேக், மாரடைப்பு காரணமாக 2021ம் ஆண்டில் உயிரிழந்தார். ஆனாலும் விவேக்கின் காட்சிகளை நீக்க வேண்டாம் என ஷங்கரும் கமல்ஹாசனும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்தது பற்றியும், அவரது கேரக்டர் குறித்தும் பாபி சிம்ஹா பேசியுள்ளது வைரலாகி வருகிறது. இதனால் இந்தியன் 2 தான் விவேக்கின் இறுதிப் படமாக இருக்கும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் மனோபாலா, நெடுமுடி வேணு ஆகியோரின் காட்சிகள் இந்தியன் 2 படத்தில் இருக்குமா இல்லையா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.