மதுரையில் பரபரப்பு : அரசு பேருந்தில் இருந்து மாணவரை கீழே தள்ளி விட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்.!
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி அருகே பாலுசாமி நாடார் வீதியை சேர்ந்தவர் சங்கர் கணேஷ் மகன் மோகன் பிரபு. இவர், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் சேர விண்ணப்பம் வாங்குவதற்காக கோயம்புத்தூருக்கு வந்துள்ளார்.
அங்கு அவர், சிங்காநல்லூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக சீரநாயக்கன் பாளையத்தில் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது அந்த பேருந்தின் நடத்துனர் மோகன் பிரபுவிடம், பேருந்து சிங்காநல்லூர் செல்லாது என்றும் கோவை ரெயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். அங்கிருந்து சிங்காநல்லூருக்கு செல்லுமாறு தெரிவித்தார்.
இதற்கு மோகன்பிரபு நடத்துனரிடம் அறிவிப்பு பலகையில் சிங்காநல்லூர் செல்லும் என்று உள்ளதே என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மோகன் பிரபுவை பேருந்தில் கீழே தள்ளி விட்டு சென்றுள்ளனர். இதில் அவருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மோகன் பிரபுவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மோகன் பிரபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன் படி, போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், மோகன் பிரபு நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் மனு ரசீது மட்டும் வழங்கியுள்ளனர்.