சென்னை: விஜய் – லோகேஷ் கூட்டணியில் முதல் படமாக உருவான மாஸ்டர் 2021ம் ஆண்டு வெளியானது.
விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
மாஸ்டர் படத்தில் லோகேஷின் பேச்சை நம்பி தான் ஏமாந்துவிட்டதாக நடிகர் சாந்தனு சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்த பஞ்சாயத்தை லோகேஷ் கனகராஜ் விஜய்யிடம் கொண்டு செல்ல, அவர் கொடுத்த ரியாக்ஷன் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய்யிடம் சென்ற சாந்தனு பஞ்சாயத்து
விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி முதன்முறையாக இணைந்த திரைப்படம் மாஸ்டர். கொரோனா ஊரடங்குக்கு பின்னர் திரையரங்குகளில் வெளியான முதல் பெரிய பட்ஜெட் படம் என்றால் அது மாஸ்டர் தான். 2021 பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இந்தப் படத்துக்கு 50 சதவித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தும் மாஸ்டர் திரைப்படம் 200 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
இந்தப் படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் விஜய் – விஜய் சேதுபதியை தவிர மற்றவர்களுக்கான ஸ்பேஸ் பெரிதாக இல்லை என்பதே ரசிகர்களின் கருத்து. மாஸ்டர் படத்தில் கல்லூரியில் விஜய்க்கு எதிராக செயல்படும் கேங்கின் லீடராக பார்கவ் என்ற கேரக்டரில் சாந்தனு நடித்திருந்தார்.
இந்நிலையில், மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக வெளிப்படையாக கூறினார். இந்தப் படத்திற்காக 30 நாட்கள் ஷூட்டிங் சென்றதாகவும், தனக்கு தனியாக சண்டை காட்சி, பாட்டு எல்லாம் எடுத்ததாகவும் குறிப்பிட்டார். அதனால் 40 நிமிடம் வரை மாஸ்டர் படத்தில் முகம் காட்டுவேன் என நினைத்தேன். ஆனால், படம் பார்க்கும்போது தான் எனது காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
வெறும் 12 நிமிடம் மட்டுமே எனது காட்சிகள் இருக்கும் என தெரிந்திருந்தால், நான் மாஸ்டர் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பேட்டியே கொடுத்திருக்கமாட்டேன் என கூறியிருந்தார். சாந்தனு இப்படி பேசியதை அறிந்த லோகேஷ் கனகராஜ், அவரை கூல் செய்வதற்காக 4 நாட்களுக்கு முன்னர் டின்னர் சாப்பிட அழைத்துள்ளார். ஆனால், தான் ஹீரோவாக நடித்த இராவண கோட்டம் திரைப்படத்தின் ப்ரொமோஷன் காரணமாக அப்போது சாந்தனு போகவில்லையாம்.
அதன்பிறகு லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை சந்திக்க சென்றுள்ளார் சாந்தனு. அப்போது விஜய்யிடம் சாந்தனுவை அழைத்துச் சென்ற லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் பட பஞ்சாயத்து குறித்தும் பேசியுள்ளார். மாஸ்டர் படத்தில் சாந்தனுவின் சீன்ஸ் குறைக்கப்பட்டதால் இப்படி பேசி வருகிறான் என உரிமையாக விஜய்யிடம் கூறியுள்ளார். மேலும் வீட்டுக்கு கூப்பிட்டால் கூட வரமாட்டேன் என சாந்தனு சொல்வதாக லோகேஷ் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டதும் இருவரையும் பார்த்து சிரித்த விஜய், “மாஸ்டர் படத்தில் நீ அவன கூப்பிட்டு வச்சு பண்ணதுக்கு, அவன் உன் வீட்டுக்கு வேற வருவானா” எனக் கேட்டு கலாய்த்துள்ளார். இதனைக் கேட்டு சாந்தனுவும் லோகேஷும் சிரிக்க அந்த இடமே காமெடி தர்பராக மாறியுள்ளதாம். சாந்தனு வேதனையுடன் பேசியது கடைசியாக காமெடியாக போய் முடிந்துள்ளது.