பெங்களூரு: கர்நாடகாவில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 128 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவையான நிலையில் 128 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. பாஜக இதுவரை 60 இடங்களில் வெற்று பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இதனால், கர்நாடகாவில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
ராகுல் காந்தி பேட்டி: தேர்தல் முடிவுக்குப் பின் ராகுல் காந்தி பேசும்போது “ பெரும் முதலாளிகளை எளிய மக்கள் வீழ்த்தியுள்ளனர். கர்நாடகாவில் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு, அன்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. வெறுப்பரசியலை கையிலெடுக்காமல் அன்பின் அடிப்படையில் இந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ளது. கர்நாடகா மக்களுக்கு நாங்கள் 5 வாக்குறுதிகளை கொடுத்திருந்தோம். முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இந்த யுத்தத்தில் நாங்கள் வெறுப்பைக் கொண்டு சண்டையிடவில்லை. அன்பின் மூலம் சண்டையிட்டோம். இந்த தேசம் அன்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது என்பதை கர்நாடக மக்கள் நிரூபித்துள்ளனர். மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நான் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியையும் வாழ்த்துகளையும் கூறிக் கொள்கிறேன்.” என்று பேசினார்
பசவராஜ் பொம்மை பேட்டி: தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, “பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கடுமையாக முயற்சித்தும் எங்களால் போதிய எண்ணிக்கையில் வெற்றி பெற முடியவில்லை. தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகு அதுகுறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும். இந்த முடிவினை வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாடமாக ஏற்றுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கொண்டாட்டம்: பாஜகவை வென்று தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கிறது. இதையடுத்து, கர்நாடகாவிலும், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கர்நாடக தேர்தலில் ஆளும் பாஜக 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாய சங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளில் போட்டியிட்டன. 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.