கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் – முன்னணி நிலவரம்
`மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற காங்கிரஸுக்கு வாழ்த்துகள்!’ – பிரதமர் மோடி
கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சிக்குத் தன்னுடைய வாழ்த்துகளைப் பகிர்ந்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
“கர்நாடகாவுக்கு நாடே கடமைப்பட்டிருக்கிறது” – ப.சிதம்பரம்
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸுக்குச் சாதகமாக வந்துகொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடக மாநில வாக்காளர்களுக்கு என் அன்பான, உளமார்ந்த நன்றி. சட்டமன்றத் தேர்தலில் மிகத் தெளிவான, ஆணித்தரமான தீர்ப்பைத் தந்த கர்நாடக மக்களுக்கு இந்த நாடே கடமைப்பட்டிருக்கிறது, நன்றி சொல்கிறது. இதை ஒரு மாநில சட்டமன்றத் தேர்தலாகப் பார்க்கக் கூடாது.
இந்திய அரசியல் சாசனத்தின் உயரந்த நோக்கங்களைக் காப்பாற்றி நிலைநாட்டிய பெரும் போரில் வெற்றியடைந்தோம் என்று பெருமைப்பட வேண்டும். இனி இந்திய மக்கள் விழித்துக்கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்
தமிழ்நாடு பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி சிக்மகளூரில் தோல்வி!
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழ்நாடு பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி சிக்மகளூரில் தோல்வியடைந்திருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.டி.தம்மையாவிடம் 3,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மேலும், பா.ஜ.க-விலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், ஹூப்ளி – தார்வாட் மத்தி தொகுதியில் தோல்வியடைந்திருக்கிறார்.
“யதேச்சதிகார அரசியல் ஒழிந்துவிட்டது” – கர்நாடகத் தேர்தல் முடிவுகள் குறித்து மம்தா!
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட காங்கிரஸின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுவிட்டது என்பதைப்போலவே முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மம்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “மாற்றத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்த கர்நாடக மக்களுக்கு தலை வணங்குகிறேன். யதேச்சதிகார மற்றும் பெரும்பான்மைவாத அரசியல் ஒழிந்துவிட்டது. பன்முகத்தன்மையும், ஜனநாயக சக்திகளும் வெற்றிபெற வேண்டும் என்று மக்கள் நினைத்துவிட்டால், மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் எந்தவொரு சக்தியும், அவர்களை அடக்க முடியாது என்பதே இதன் மையக்கரு, நாளைய பாடம்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
“திராவிட நிலப்பரப்பிலிருந்து பா.ஜ.க முற்றிலுமாக அகற்றப்பட்டிருக்கிறது!’’ – ஸ்டாலின்
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார். அதில்…
“கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்.
கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்திலிருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கின்றன. பா.ஜ.க-வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி, அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.
“திராவிட நிலப்பரப்பிலிருந்து பா.ஜ.க முற்றிலுமாக அகற்றப்பட்டிருக்கிறது. அடுத்த, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்’’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
“இது கர்நாடக மக்களின் வெற்றி!” – ராகுல் காந்தி
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “இது கர்நாடக மக்களின் வெற்றி. கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் கட்சி என்றும் துணையிருக்கும். எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி” எனக் கூறினார்.
கர்நாடகா தேர்தல் முடிவுகள்: விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜியுடன் ஒரு நேர்காணல்
“கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி.” – டி.கே.சிவக்குமார்
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்துவரும் நிலையில், கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் வெற்றிபெற்றிருக்கிறார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.சிவக்குமார், “கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சித்தராமையா உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களுக்கும் நன்றி” எனக் கண்ணீர்மல்கப் பேட்டியளித்தார்.
இந்த அளவுக்குத் தோல்வியை எதிர்பார்த்தீங்களா… `காது கேக்கல…’
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க பின்னடைவைச் சந்தித்துவரும் நிலையில், சென்னையிலுள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் தேர்தல் முடிவு குறித்து மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர். “கர்நாடகாவில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை சார்பாக வாழ்த்துகள்” என்றார்.
அப்போது செய்தியாளர்கள், “இந்த அளவுக்குப் பின்னடைவு வரும் என நினைத்தீர்களா?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “காது கேக்கல” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
கர்நாடகத் தேர்தல் முடிவுகள்: பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியுடன் ஒரு நேர்காணல்
கர்நாடகத் தேர்தல்: “இது பிரதமர் மோடியின் தோல்வி!” – சத்தீஸ்கர் முதல்வர்
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. 12:30 மணி நிலவரப்படி 124 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னணி வகிக்கிறது. இந்த நிலையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், “தேர்தல் முடிவு நாங்கள் எதிர்பார்த்ததுபோலவே அமைந்திருக்கிறது. பிரதமர் மோடி தன்னை முன்னிலைப்படுத்தித்தான் வாக்கு சேகரித்தார். எனவே, இது மோடியின் தோல்வி. இதன் மூலம் பஜ்ரங் பாலி யாருடன் நிற்கிறார் என்பதை நீங்கள் பார்க்கலாம். பஜ்ரங் பாலியின் ஆயுதம் ஊழலின் தலையை நசுக்கிவிட்டது. பா.ஜ.க-வின் கதை முடிந்துவிட்டது” என்று கூறியிருக்கிறார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெற்றி!
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிக்கான் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கிறார். ஷிக்கான் தொகுதியில் காங்கிரஸின் யாசிர் அகமது கான் பதான் என்பவரை எதிர்த்து 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தற்போதைய நிலவரப்படி, சிட்டிங் அமைச்சர்கள் எட்டுப் பேர் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றனர்.
`மை டீம்’ – டி.கே.சிவக்குமார் ட்வீட்
கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தற்போது முன்னிலையில் இருக்கும் நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், ட்விட்டரில் `மை டீம்’ என ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்!
கர்நாடகத் தேர்தல் முடிவுகள்: கவிதா முரளிதரனுடன் ஒரு நேர்காணல் | Karnataka election results 2023
ஹெலிகாப்டரில் வரும் வேட்பாளர்கள்!
கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தற்போது பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் தங்கள் கட்சி வேட்பாளர்களை பெங்களூருக்கு வரச்சொல்லியிருக்கிறது. அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பெங்களூருக்கு வர உத்தரவு எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
கர்நாடகத் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் சித்தராமையா மைசூரிலுள்ள தேநீர்க்கடை ஒன்றின் அருகில் தனது காரில் அமர்ந்தபடி கூலாக காபி குடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி பின்னடைவு
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி பின்னடைவில் இருக்கிறார்.
கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை; தொண்டர்கள் கொண்டாட்டம்!
பெங்களூர்: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, இன்று நடைபெற்றுவரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதை, அந்தக் கட்சியினர் கொண்டாடிவருகின்றனர்.
செய்தியாளர்: ச.பிரசாந்த்.
கர்நாடகத் தேர்தல்; `நம்பிக்கையுடன் இருக்கிறோம்.’ – காங்கிரஸ் ட்வீட்
கர்நாடக சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. காங்கிரஸ் கட்சி தற்போது முன்னிலை வகித்துவரும் நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நான் வெல்ல முடியாதவன், நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்…” எனப் பதிவிட்டிருக்கிறது. அதோடு ராகுல் காந்தியின் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
கர்நாடகா தேர்தல் முடிவுகள்; வெல்லப்போவது யார்?
காங்கிரஸ் 63 Vs பாஜக – 62..
கர்நாடகத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கமே இரு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தற்போதைய நிலபரப்படி, பாஜக – 62, காங்கிரஸ் 63, ம.ஜ.த 18 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன.
கர்நாடகத் தேர்தல் முன்னணி நிலவரம்… காங்கிரஸ் முன்னிலை..!
கர்நாடகத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கமே இரு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
முதலில் தபால் மூலம் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போது மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் முன்னிலை பெற்றிருக்கிறது.
பாஜக – 66, காங்கிரஸ் 82, மஜத 17 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.
காங்கிரஸ் பாஜக-வுக்கிடையே கடும் போட்டி!
கர்நாடகத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கமே இரு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தற்போதைய நிலபரப்படி, பாஜக – 21, காங்கிரஸ் 18, மஜத 5 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன.
“பாஜக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று நிலையான ஆட்சியை அமைக்கும்!” – பசவராஜ் பொம்மை
“கர்நாடகாவுக்கு இன்று மக்கள் அளித்த தீர்ப்பு வெளியாகவிருப்பதால், அந்த மாநிலத்துக்கு மிக முக்கியமான நாள். பாஜக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று நிலையான ஆட்சியை அமைக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
முட்டி மோதும் பாஜக – காங்கிரஸ்!
கர்நாடகா தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியிருக்கிறாது. தற்போதைய நிலவரப்படி, பாஜக 7 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், மஜத 3 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தற்போது தொடங்கியிருக்கிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் 36 மையங்களில் எண்ணப்படுகின்றன. முதலில் வீட்டிலிருந்தே வாக்களித்த முகவர்களின் வாக்குகள் எண்ணப்படும். அதன் பின்னர் தபால் வாக்குகள் எண்ணப்படும். இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக 224 தொகுதிகளிலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 இடங்களிலும் போட்டியிட்டிருக்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது.
“கூட்டணிக்காக யாரும் தொடர்புகொள்ளவில்லை!” – குமாரசாமி
கர்நாடகத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவிருக்கும் நிலையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ஜே.டி.எஸ் தலைவர் குமாரசாமி, “இன்னும் இரண்டு, மூன்று மணி நேரத்தில் எல்லாம் தெளிவாகிவிடும். இரு தேசியக் கட்சிகளும் அமோக வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. கருத்துக்கணிப்பு JD(S) க்கு 30-32 இடங்களை அளித்திருக்கிறது. நான் ஒரு சிறிய கட்சி, எனக்கு எந்தத் தேவையும் இல்லை… நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கிறேன்” என்றார்.
கூட்டணி ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த குமாரசாமி, “இதுவரை யாரும், எந்தக் கட்சியும் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. எனக்கு எந்தக் கோரிக்கையும் இல்லை. எங்களுடையது ஒரு சிறிய கட்சி” என முடித்துக்கொண்டார். முன்னதாக, “எங்கள் கோரிக்கைக்குச் செவி சாய்க்கும் கட்சியுடன் கூட்டணி’’ என குமாரசாமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகாவிலுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 73.19% வாக்குகள் பதிவாகின.
இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக 224 தொகுதிகளிலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 இடங்களிலும் போட்டியிட்டிருக்கின்றன. கர்நாடகத் தேர்தலைப் பொறுத்தவரையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வெல்லும் இடங்களும் முக்கியம். அந்த வகையில் அந்தக் கட்சி 207 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கணிசமான இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன. அரசியல் கட்சிகளைத் தவிர, 918 சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர். ஒட்டுமொத்தமாக 2,613 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
தேசிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு, கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் களத்தில் மோதுகின்றன. மும்முனைப் போட்டியாக இருந்தாலும், பா.ஜ.க-காங்கிரஸ் இடையேயான மோதல்தான் பெருமளவில் பேசப்பட்டுவருகிறது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படவிருக்கின்றன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை அறிய கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்…