இன்னும் சில மணி நேரங்களில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி முடிவுக்கு வருகிறது. அதற்கான முடிவுரையை காங்கிரஸ் பக்காவாக எழுதிவிட்டது. இதற்கு அவர்கள் கர்நாடகா மாநில மக்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். டெல்லியில் இருந்து ராகுல் காந்தி அதை கச்சிதமாக செய்துவிட்டார். முதலாளிகளை வைத்து ஆட்சி நடத்தியவர்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி மக்களின் ஆட்சி நடக்கும். எங்களுக்கு வெற்றியை தந்தை மக்களுக்கு அடி மனதில் இருந்து நன்றி தெரிவித்து கொள்வதாக பேசினார். இன்று மாலை ஆளுநரை சந்தித்து முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளார்.
கர்நாடகா தேர்தல் முடிவுகள்
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 136, பாஜக 64, மதச்சார்பற்ற ஜனதா தளம் 20, சுயேட்சைகள் 2, மற்றவை 2 என முன்னிலை பெற்றுள்ளன. இதில் 91 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்ததாக யார் முதலமைச்சர் என்ற கேள்வி காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் பெங்களூரு விரைகின்றனர். மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் நாளை நடைபெறுகிறது.
காங்கிரஸ் முதலமைச்சர் யார்?
இதில் ஒருமித்த ஆதரவுடன் அடுத்த முதலமைச்சர் தேர்வு செய்யப்படவுள்ளார். இருப்பினும் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. அவர்கள் கைகாட்டினால் மற்றவர்கள் இசைந்து ஒருமனதாக ஆதரவு தெரிவிக்க வேண்டியது தான். முதல்வர் நாற்காலி கிடைக்கவில்லை என கோஷ்டியாக பிரிந்து மீண்டும் பாஜகவிற்கு வழிவிடாமல் இருந்தால் சரி என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தற்போது மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை நோக்கி கர்நாடக மக்களின் கவனம் திரும்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் சித்தராமையா
ஏன் ஒட்டுமொத்த அரசியல் ஆர்வலர்களும் அப்படித்தான் இருக்கின்றனர். சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகிய இருவரில் ஒருவருக்கு தான் முதலமைச்சர் நாற்காலி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சித்தராமையா ஏற்கனவே 2013 முதல் 2018 வரை 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்திருக்கிறார். ஆட்சியில் சர்ச்சைகள் எழாமல் வெற்றிகரமாக நிறைவு செய்தார். மூத்தவர், நிதானமாக அரசியல் செய்பவர். எனவே இவரை தேர்வு செய்தால் நேர்மையான ஆட்சி நடக்கும் என ஒருசாரார் வலியுறுத்துகின்றனர்.
டிகே சிவக்குமார்
அதேசமயம் தான் சார்ந்த குருபா சமூகத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு வரம்பு மீறி அளித்த முக்கியத்துவம், திப்பு சுல்தான் விவகாரம் என சில சர்ச்சைகளும் இருக்கின்றன. மறுபுறம் காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் விசுவாசமான நபராக திகழ்பவர் டிகே சிவக்குமார். குறிப்பாக காந்தி குடும்பத்தின் ஃபேவரைட் இவர் என்று சொல்லலாம். எனவே இவருக்கு வாய்ப்பளிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
வழக்குகளால் சிக்கல்
இவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை, ஐடி ஆகியவற்றின் கீழ் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடி விவகாரத்தில் திகார் சிறையில் 104 நாட்கள் தண்டனை அனுபவித்தவர். தற்போது ஜாமினில் இருக்கிறார். ஒருவேளை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டால் வழக்குகளை தூசு தட்டி டிகே சிவக்குமாருக்கு பாஜக தொல்லை கொடுக்க வாய்ப்புள்ளது. இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு சரியான நபரை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்யும் எனக் கூறப்படுகிறது.