To prevent the dominance of China in the West Asian countries… big plan! | மேற்காசிய நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க… பெருந்திட்டம்!

வாஷிங்டன் வளைகுடா நாடுகள் அல்லது மத்திய கிழக்கு நாடுகள் என்றழைக்கப்படும், மேற்காசிய நாடுகளில், நம் அண்டை நாடான சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில், இந்தியா ஒரு பெருந்திட்டத்தை வகுத்துள்ளது. தனக்குள்ள அனுபவம், திறன், திறமையின் அடிப்படையில், இந்த நாடுகளில் ரயில் பாதைகள் கட்டமைப்பை உருவாக்க இந்தியா முன்வந்துள்ளது.

‘இந்தோ – பசிபிக்’ எனப்படும் இந்தியப் பெருங்கடல் – பசிபிக் பெருங்கடல் இடையே உள்ள பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

இங்குள்ள பல நாடுகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதாக கூறி, சீனா அவற்றை தன் கட்டுப் பாட்டில் வைத்துள்ளது. உலகின் வலுமிக்க நாடாக தன்னை உயர்த்திக் கொள்ளும் வகையில் சீனா செயல்பட்டு வருகிறது.

முன்னுரிமை

சீனாவின் இந்த முயற்சியை முறியடிக்கும் நோக்கில், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு, முக்கியத்துவத்துக்கு அமெரிக்கா முன்னுரிமை கொடுத்து வருகிறது.

இந்நிலையில், தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடன், ஈரான், யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் உட்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

சவுதி அரேபியா மற்றும் ஈரான் இடையே நட்புறவை ஏற்படுத்தும் முயற்சியிலும் அது ஈடுபட்டுள்ளது. இவ்வாறு மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியிலும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, யு.ஏ.இ., இடம்பெற்றுள்ள, ‘ஐ2 – யு2’ என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. இந்நாடுகளின் பரஸ்பர வளர்ச்சி மற்றும் நட்புறவுக்காக இந்த அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.

யு.ஏ.இ., மற்றும் இஸ்ரேலுக்கு, சீனாவுடன் நல்ல நட்புறவு உள்ளது. அதனால், சீனாவுக்கு எதிரான அமைப்பாக இதை பார்க்க முடியாது.

அதே நேரத்தில் இந்த அமைப்பில் உள்ள அமெரிக்கா மற்றும் இந்தியா, சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளன.

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இலி கோஹன் சமீபத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். பாலத்தீனத்துடனான மோதல் அதிகரித்துள்ளதால், தன் பயணத்தை பாதியில் முடித்து அவர் நாடு திரும்பினார்.

ஆதரவு

இந்த சூழ்நிலையில், இந்தியா, அமெரிக்கா, யு.ஏ.இ.,யின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம், சமீபத்தில் அமெரிக்காவில் நடந்தது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் இந்த சந்திப்பில் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தின்போது, நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், புதிய திட்டம் ஒன்றை தெரிவித்துள்ளார். மேற்காசிய நாடுகளுக்கு இடையே ரயில் பாதை கட்டமைப்பை உருவாக்குவது தான் அந்த திட்டம்.

உலகிலேயே மிகப்பெரும் ரயில்வே சேவையை அளிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

ரயில்வே துறையில் தன் அனுபவம், திறன், திறமைகளை பகிர்ந்து கொள்வதற்கு இந்தியா தயாராக உள்ளதாக அஜித் தோவல் குறிப்பிட்டார்.

இதன் வாயிலாக, மேற்காசிய நாடுகளுடன், கடல், சாலை மற்றும் ரயில் மார்க்கமாக இணைப்பு ஏற்படுத்த முடியும் என, அவர் குறிப்பிட்டார். இதற்கு, அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனேயே, இந்த பெருந் திட்டத்தை இந்தியா கூறியுள்ளதாக, அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘பாரின் பாலிசி’ என்ற சர்வதேச விவகாரங்களுக்கான இதழ் தெரிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.