லக்னோ: உத்தரப் பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் 17 மேயருக்கான இடங்களில் 16 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இந்தமாதம் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது . உத்தரப்பிரதேசத்தில் உள்ள 17 மாநகராட்சிகள், 199 நகர் பலிகா பரிஷத்கள், 544 நகர் பஞ்சாயாத்து பதவிகளுக்கான தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் முதல் கட்டத்தில் 52 சதவீத வாக்குகளும், இரண்டாவது கட்டத்தில் 53 சதவீத வாக்குகளும் பதிவாகின. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரம், வாக்குச்சீட்டு ஆகிய இரண்டு முறைகளிலும் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன.
அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதில் காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே பாஜக ஆதிக்கம் செலுத்தி முன்னிலை வகித்து வந்தது. அங்குள் 17 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான இடங்களில் 16 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ்வாடி கட்சிகளை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.
நகராட்சி பதவிகளில் பகுஜன் சமாஜ்வாடி கட்சியும், பிஎஸ்பி கட்சியும் பாஜவுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. மொத்தமுள்ள 199 நகராட்சி இடங்களில் பாஜக 65 இடங்களிலும், 53 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும், பிஎஸ்பி கட்சி 21 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் பிற கட்சிகள் 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.
இந்தநிலையில், மேயர் பதவிகளில் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து பாஜகவின் வெற்றிக் கொண்டாட்ம் லக்னோவில் மாலை நடைபெறுகிறது.