சென்னை: அனைத்து உழவர் சந்தைகளிலும் காய், கனி வரத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் செயல்பாடுகள் குறித்து, மாவட்டவேளாண்மை துணை இயக்குநர்கள் (வேளாண் வணிகம்), விற்பனைக்குழு செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். துறையின் செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத் துறை இயக்குநர் ச.நடராஜன் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: கிராமப்புறங்களில் தேவைப்படும் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள், சிப்பம் கட்டும் வசதிகள், தரம் பிரிப்பு வசதிகள் போன்றவற்றை வேளாண் கட்டமைப்பு நிதி மூலம் தனியார் நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உருவாக்கும் வகையில், வங்கிகளில் பெறப்படும் ரூ.2 கோடி வரையிலான கடன் மீது 7 ஆண்டுகளுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இதுவரை, 2,870 நபர்களுக்கு ரூ.653.60 கோடி கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான காய், கனிகளை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வகையில் தற்போது தமிழகத்தில் 183 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. உழவர்சந்தைகளில் வரத்தை அதிகரிக்க தோட்டக்கலைத் துறையும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையும் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பைக் குறைக்கவும், விவசாயிகளை பெரும் சந்தைகள், பதப்படுத்துவோர் மற்றும் நுகர்வோர்களுடன் ஒருங்கிணைக்கவும், காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற அழுகும் பொருட்களுக்கான விநியோக தொடர் மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும், 187 குளிர்பதன கிடங்குகளை விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சீரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்றார்.