இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியிலும் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
இத்திட்டத்தில் சேர்ந்து படிக்கும் ஏழை மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு வழங்கி வருகிறது. தனியார் பள்ளிகளில் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க வேண்டும். தொடர்ந்து 12-ம் வகுப்பு வரை அந்த மாணவருக்கு ஆகும் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கிறது.
தமிழகத்தில் 80 ஆயிரம் இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். வருகிற கல்வியாண்டிற்கான இலவச மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஒரு மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கால அவகாசம் வரும் 18-ம் தேதியுடன் நிறைவு பெற உள்ள நிலையில் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. சேர்க்க ஒரு லட்சம் குழந்தைகளின் பெற்றோர் விண்ணப்பித்துள்ளனர். வரும் கல்வியாண்டில் இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி குழந்தைகளை சேர்க்க இதுவரையில் ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மாவட்டம் வாரியாக விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக பெறப்பட்டுள்ளது. மொத்தம் இடங்களை விட விண்ணப்பங்கள் அதிகமாக வந்துள்ள பள்ளிகளில் குலுக்கல் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். கல்வி அதிகாரிகள் பெற்றோர் முன்னிலையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பெரும்பாலானவர்கள் விண்ணப்பித்து விட்டனர். அதனை கல்வி அதிகாரிகள் பள்ளி வாரியாக பரிசீலனை செய்து பள்ளிகளில் சேர்ப்பதற்கான முன் ஏற்பாடுகளை செய்வார்கள். பள்ளி திறப்பதற்கு முன்னதாக இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு விடும். பள்ளி திறந்தவுடன் பெற்றோர்களை வரவழைத்து இடங்கள் ஒதுக்கப்படும்.
ஒரு சில பள்ளிகளில் அதிகளவு விண்ணப்பங்கள் வந்துள்ளன. 25 சதவிகித இடங்களை விட கூடுதலாக குழந்தைகளை சேர்க்க முடியாது. அதனால் போட்டி உள்ள பள்ளிகளில் குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.