கர்நாடகா மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவர். அதன்படி காங்., கட்சிக்கு இம்முறை வாய்ப்பு கொடுத்துள்ளனர். பா.ஜ., வளர்ச்சி திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்தியது. மக்களின் அடிப்படை பிரச்னைகளை சமாளிக்க தவறியது. உட்கட்சி பூசலும் உச்சத்தை தொட, ஆட்சியை இழந்தது.
கர்நாடகாவில் சட்டசபை தேர்தலை பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., அரசு நெருக்கடியுடன் எதிர்கொண்டது. எடியூரப்பா காலத்தில் அடக்கி வாசித்த இந்துத்துவா அமைப்புகள், பொம்மை ஆட்சியில் தலை துாக்கின. ஜாதிரீதியாகவும் சிக்கல் ஏற்பட்டது. 17 சதவீதம் உள்ள லிங்காயத்து ஜாதியை சேர்ந்த எடியூரப்பா புறக்கணிக்கப்பட்டார். லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த பொம்மைக்கு பெரிய செல்வாக்கு இல்லை. கோஷ்டிப்பூசலும் தோல்விக்கு காரணமாக அமைந்தது. பா.ஜ., தேசிய செயலர் பி.எல். சந்தோஷி, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஒரு பிரிவாகவும், எடியூரப்பா தனி கோஷ்டியாகவும் செயல்பட்டனர்.
வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
பெங்களூருவில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட ‘விஸ்வேஸ்வரய்யா ரயில் முனையம், ஷிமோகாவில் புதிய விமான நிலையம் என நவீன திட்டங்களை பா.ஜ., கொண்டு வந்தது. நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது. தும்கூரில் ஆசியாவின் பெரிய ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை, பெங்களூரு-மைசூரு ஆறு வழி எக்ஸ்பிரஸ் சாலை, மின்னும் தெரு விளக்குகள், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை அமல்படுத்தி, மாநிலத்துக்கு கம்பீர தோற்றத்தை கொடுத்தது.
பிரதமர் மோடியின் ‘இமேஜை’ வைத்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி என்பதால், ‘டபுள் இன்ஜின்’ அரசு ‘பார்முலா’ மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக எடுத்துக் கூறியது. தேர்தல் நடக்கும் தொகுதிகளில் மோடி 36 கி.மீ., துாரத்துக்கு ‘ரோடு ஷோ’ நடத்தினார். மக்கள் பூ மழை பொழிந்தனர். இவை ஓட்டுகளாக மாறவில்லை. தேசியம், தேச பாதுகாப்பு போன்ற விஷயங்களைவிட அடிப்படை பிரச்னைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளித்தனர்.
வலுவான திட்டம்
காங்., கட்சியை பொறுத்தவரை திட்டமிட்டு பிரசாரம் செய்தது. ஏழை, ‘மிடில் கிளாஸ்’ மக்களின் ஓட்டுகளை குறி வைத்தது. சித்தராமையா, டி.கே.சிவகுமார், ‘மண்ணின் மைந்தன்’ காங்., தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சுர்ஜிவாலா, ராகுல், பிரியங்கா என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். விலைவாசி உயர்வு, விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை, மின் வெட்டு போன்ற உள்ளூர் பிரச்னைகளை எடுத்துக் கூறினர். தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்தனர்.
ஜாதி அடிப்படையிலும் காங்., வலுவாக இருந்தது. 15 சதவீதம் உள்ள ஒக்காலிக ஜாதியை சேர்ந்த டி.கே.சிவகுமாரை மாநில தலைவராக நியமித்தது. ‘மைனாரிட்டி’ ‘ஓபிசி’ களை கவர்ந்த தலைவராக சித்தராமையா உள்ளார். குருபா ஜாதியை சேர்ந்த இவர், 50-60 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கக்கூடியவராக திகழ்ந்தார். 13 சதவீத முஸ்லிம் ஓட்டுகளும் காங்., கட்சிக்கு சாகதமாக அமைந்தது. இவர்கள், 40 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கின்றனர்.
ஒக்காலிக ஜாதியினர் முன்பு மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவாக இருந்தனர். இக்கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை என்பதால், இம்முறை காங்., பக்கம் சாய்ந்தனர். ராகுல் நடத்திய ஒற்றுமை யாத்திரையும் வலு சேர்த்தது. இவர், கர்நாடகாவில் பயணம் மேற்கொண்ட 51 தொகுதிகளில் காங்., 38ல் (75 சதவீத வெற்றி) வென்றது. ஒட்டு மொத்தமாக பார்த்தால், காங்., கட்சியினரின் ஒருங்கிணைந்த பிரசாரத்திற்கு ஆதரவாக மக்கள் தீர்ப்பு அமைந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்