புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஜனவரி 14-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தை சென்றடைந்தபோது, அதில் பங்கேற்ற ஜலந்தர் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் சந்தோக் சிங் சவுத்ரி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து, ஜலந்தர் மக்களவை தொகுதிக்கு கடந்த 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் சவுத்ரி மனைவி கரம்ஜித் கவுர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் சுஷில் குமார் ரிங்கு போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ரிங்கு சுமார் 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் கடந்த 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய 5 தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தது. இந்நிலையில், இந்த தொகுதியை 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஆம் ஆத்மியிடம் பறிகொடுத்துள்ளது காங்கிரஸ். ஆம் ஆத்மியின் முதல் மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றவர் பகவந்த் மான். இவர் பஞ்சாப் முதல்வராகிவிட்டதால் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். எனினும், அந்தத் தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்தது.
காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ (ஜலந்தர் மேற்கு) ரிங்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஆம் ஆத்மியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.