ஐபிஎல் 16ஆவது சீசன் 59ஆவது லீக் போட்டியை எட்டிவிட்டோம் . இன்னும் ஒவ்வொரு அணிகளுக்கும் தலா 2 முதல் 3 போட்டிகளே மீதமுள்ளது.
அனைத்து அணிகளுக்கும் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருகிறது. நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டன.
டெல்லி தோற்றால் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கான தகுதியை இழந்துவிடும். பஞ்சாப் எஞ்சிய அனைத்துப் போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்ற கட்டாய நிலையில் டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் வாழ்வா, சாவா என்ற நிலையில் பலப்பரிட்சை செய்தன. இரு அணிகளும் தங்களது முந்தைய போட்டியில் தோல்வியைத் தழுவி இருக்க டாஸ் வென்ற டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தார்.
பிட்சில் பௌன்ஸ் கம்மியாக இருப்பதால் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும் என்னும் சூழலில் முதல் ஓவரை கலீல் அஹமத் வீச, பிரப்சிம்ரன் மற்றும் தவான் களமிறங்கினர். 2 வைட் பந்துகளை வீசியது தவிர 4 ரன்களே கொடுத்து சீரான தொடக்கமாக அமைந்தது. அடுத்த ஓவரை வீச வந்த இஷாந்தின் முதல் பந்தை எல்லைக்கு அப்பால் 6 ரன்களாக மாற்றிய தவான் அடுத்த பந்திலே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பிரப்சிம்ரன் கிடைக்கும் நல்ல பந்துகளை எல்லாம் பவுண்டரியாக மாற்ற 4 ஓவர் முடிவில் 32-1 என்ற நிலை இருந்தது.
5வது ஓவரின் முதல் பந்தில் ஆபத்தான பேட்ஸ்மேனான லிவிங்ஸ்டனை ஸ்டம்ப்கள் பறக்க போல்டு செய்தார் இஷாந்த் சர்மா. அதற்கடுத்த ஓவரில் அக்ஷர் படேலின் சூழலில் போல்டானார் ஜிதேஷ் ஷர்மா. பவர் பிளே முடிவில் 46-3 என்ற இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டது.
பிறகு பிரப்சிம்ரனுடன் இணைந்த சுட்டிக்குழந்தை சாம் கரன் நிதானமாக பாட்னர்ஷிப்பை உருவாக்கினார்கள். பத்து ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 66 ரன்கள் அடித்திருந்தது பஞ்சாப் அணி.
11வது ஓவரை வீசவந்த மிட்சல் மார்ஷின் ஓவரைக் குறிவைத்துத் தாக்குதல் தொடுத்தார் பிரப்சிம்ரன். 2 சிக்ஸர், 1 ஃபோர் உட்பட 21 ரன்கள் கிடைக்க ஆட்டம் பஞ்சாப்பின் பக்கம் திரும்ப ஆரம்பித்தது.
சாம் கரன் ஒருபுறம் ஸ்டிரைக்கை மாற்றி விட மறுபுறம் பிரப்சிம்ரன் வானவேடிக்கை காட்டி அரைசதத்தை கடந்திருந்தார். இந்நிலையில் பிரவீன் டுபெ வீசிய பந்தில் ஏறி வந்து தாக்குதல் ஆட்டத்தை ஆரம்பிக்க நினைத்த சாம்கரன் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஹர்பிரித் ப்ரார் 2 ரன்களில் நடையைக் கட்டினார்
வடசென்னை படத்தின் வசனம் போல தம்மாதுண்டு ஆங்கர் தாண்ட அவ்ளோ பெரிய கப்பலயே நிறுத்துது என்பது போல 22 வயதான பிரப்சிம்ரன் 65 பந்தில் சதம் விளாசி அணியைக் காப்பாற்றினார். முதல் 30 பந்தில் 27 ரன்களை எடுத்து மாணிக்கமாக இருந்தவர். அடுத்த 35 பந்தில் 76 ரன்களை எடுத்து பாட்ஷாவாக மாறினார்.
19வது ஓவரை வீசிய முகேஷ் குமார் பந்தில் போல்டு ஆனார். அந்த ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். முகேஷ்குமாரை வெறும் ஒரே ஒரு ஓவர்கள் மட்டுமே டேவிட் வார்னர் பயன்படுத்தியது ஆச்சர்யப்பட வைத்தது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 167 ரன்களை எடுத்தது.
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வார்னர் மற்றும் சால்ட் களமிறங்கினார். ரிஷி தவான் வீசிய முதல் முதல் 2 பந்தில் தொடர்ந்து ஃபோர் அடித்து டிரில் எடுத்தார் வார்னர். இந்த ஜோடி பவர் பிளேயில் பந்துகளை நாலாபுறமும் சிதறடிக்க 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் எடுத்தது.
இருவரும் இந்நிலையைத் தொடர்ந்தால் RCB-யை 15 ஓவரில் பொலந்தது எப்படி என்பதை பஞ்சாப் அணிக்கும் செய்துகாட்டப் போகிறார்களா? என்று தோன்றியது. இனிநிலையில் தான் சால்ட்டை lbw செய்து முதல் விக்கெட்டை ஹர்பிரித் ப்ரார் கைப்பற்றினார்.
முதல் 30 பந்தில் விக்கெட் இழப்பின்றி போன ஆட்டத்தை ஹர்பிரித் ப்ரார் மற்றும் ராகுல் சஹார் சுழல் ஜோடி அடுத்த 30 பந்தில் 6 விக்கெட்களை காலி செய்து ஆட்டத்தின் போக்கையை மாற்றியது.
தனது முதல் ஓவரில் 13 ரன்களை வழங்கிய ஹர்பிரித் ப்ரார் அடுத்த 3 ஓவரில் 4 விக்கெடுகளை வீழ்த்தினார். `தல கால்லயே போட்டாங்க தல!’ என்று பாதி lbw-க்கள் என்றால் மீதி விக்கெட்டுகள் ஸ்டெம்புகளை பதம் பார்த்தது . எஞ்சிய விக்கெட்களை சீக்கிரம் எடுத்து நெட் ரன்ரெட்டை உயர்த்துவார்கள் எதிர்பார்த்த நிலையில்.
பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர்கள் அதனைத் தவறவிட்டனர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் டெல்லி தனது கோப்பைக்கான பயணத்தில் வெளியேறியுள்ளது. பஞ்சாப் இந்த வெற்றியின் மூலம் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிரப்சிம்ரன் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார்.