பெங்களூருவில் இன்று காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆளும் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது. ஆளும் பா.ஜனதாவும், காங்கிரசும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் தோ்தல் முடிவு வெளியிடப்பட்டதில் 136 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அக்கட்சி 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.

ஆளும் பா.ஜனதா படுதோல்வி அடைந்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சி வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இந்த தோல்வியால் பா.ஜனதாவுக்கு தென்இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்கிய கர்நாடகத்தை அக்கட்சி இழந்துள்ளது. மேலும் தென்இந்திய மாநிலங்களில் ஒன்றில் கூட பா.ஜனதா ஆட்சி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த அமோக வெற்றி மூலம் காங்கிரஸ் கட்சி பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியை அடுத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்த கூட்டத்தை நடத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் பார்வையாளர்கள் வரவுள்ளனர். புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா வருகிற 17-ந்தேதி அல்லது 18-ந் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. முதல்-மந்திரி யார் என்பது குறித்து சித்தராமையா-டி.கே.சிவக்குமாரை முன்னிறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.