சென்னை:
பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தேவையான ஒரு முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக பள்ளி நிர்வாகங்களுக்கும் முக்கிய அறிவுறுத்தலும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அண்மையில் முடிவடைந்தன. இந்த தேர்வில் 94.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்திலேயே அதிக அளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 95,000-க்கும் மேற்பட்டோர் தோல்வி அடைந்தனர். இவர்களில் தேர்வு எழுதாதவர்களும் அடக்கம். இவ்வாறு தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு வரும் ஜூன் 19-ம் துணைத் தேர்வு (Supplementary Exam) தொடங்கும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இந்த துணைத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இந்த சூழலில், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் (special class) நடத்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஒரு சுற்றறிக்கையையும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் பொதுத்தேர்வு எழுதுவதை உறுதி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது.
அதேபோல, தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 47,934 மாணவர்களை துணைத் தேர்வில் பங்கேற்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், துணைத்தேர்வுக்கு மே 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.