சென்னை: குப்பையில்லா நகரங்களை உருவாக்க, 4 விழிப்புணர்வுக் குறும்படங்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்
திடக்கழிவு மேலாண்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படங்களை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, நகராட்சி நிர்வாகஇணை ஆணையர் பி.விஷ்ணுசந்திரன், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் டி.சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தூய்மையான மக்கள் இயக்கம்: இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கே.என்.நேரு பேசியதாவது: நகரங்களை தூய்மையாக்குவதற்கும், குப்பையில்லா நகரங்களை உருவாக்குவதற்கும் 2022 ஜூன் 3-ம் தேதி தூய்மையான மக்கள் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு இயக்கத்தை மேலும் மக்களிடம் கொண்டு சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால், எனது குப்பை எனதுபொறுப்பு – வீடுகளில் இருந்துபெரும் குப்பையை தரம் பிரித்துக் கொடுத்தல் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தல், எனது இடம் எனது பொறுப்பு – காலி மனைகளில் குப்பை கொட்டாது இருத்தல் குறித்து விளக்குதல், பாவம் செய்யாதிரு – அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இருந்து குப்பையைக் கீழே வீசாமல் இருத்தல், உங்கள் குப்பைஉங்கள் பொறுப்பு – பொது இடங்களில் இருக்கும் குப்பைத் தொட்டியை முறையாகப் பயன்படுத்தல் என 4 வகையான தலைப்புகளில்தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வுகுறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் மக்களைச் சென்றடையும் வகையில் இப்படங்கள் ஒளிபரப்பப்படும்.
கழிப்பறை வசதிகள்: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நகரங்களாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அனைவருக்கும் கழிப்பறைகளை வழங்குவதன் மூலம், அனைத்து நகர்ப்புறங்களையும் தொடர்ந்து ‘திறந்தவெளி மலம் கழிக்காத நகரங்களாக’ நீடித்து நிலைக்கச் செய்ய அரசு உறுதி மேற்கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேவைக்கேற்ப தனிநபர் வீட்டுக் கழிப்பறைகள், சமுதாயக் கழிப்பறைகள், பொதுகழிப்பறைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள், பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை வசதிகள்செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.