புதுடில்லி: சி.பி.ஐ., இயக்குநர் சுபோத்குமார் ஜெயிஸ்வாலின் பதவிக்காலம் நிறைவு பெற உள்ளது. இதனையடுத்து, 3 பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், கர்நாடக டிஜிபி பிரவீன் சூத் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
சி.பி.ஐ., இயக்குநரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். மத்திய அரசு விரும்பினால், 5 ஆண்டுகள் அதனை நீட்டிக்க முடியும். சி.பி.ஐ., இயக்குநரை பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு முடிவு செய்யும்.
தற்போதைய சி.பி.ஐ., இயக்குநர் சுபோத்குமாரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய இயக்குநர் குறித்து, இந்த குழு ஆலோசனை நடத்தியது. அதில் கர்நாடக டிஜிபி பிரவீன் சூத், ம.பி., டி.ஜி.பி., சுதீர் சக்சேனா மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல்படை, தீயணைப்புத்துறை தலைவராக இருக்கும் முகமது தாஜ் ஹசன் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
அதில், கர்நாடக டிஜிபி பிரவீன் சூத் , புதிய சி.பி.ஐ., இயக்குநராக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், புதிய லோக்பால் தலைவர் மற்றும் ஊழல் தடுப்பு கமிஷனர் ஆகியோர் நியமனம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement