கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையில் ஆட்சி அமைக்கவுள்ளது. இந்த தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 86 தொகுதிகளை ஒதுக்கி தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது டெல்லி பாஜக. அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்ட 86 தொகுதிகளில் 3 அமைச்சர்கள் உட்பட 50 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி மீண்டும் அமைக்கும் என்று அதீத நம்பிக்கை வைத்திருந்த அண்ணாமலைக்கு தேர்தல் முடிவு மிக பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கும். குறிப்பாக அவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலேயே 50 சதவீதம் பேர் தோல்வி அடைந்திருப்பது கலக்கத்தையும் கொடுத்திருக்கும்.
இந்த நிலையில், அண்ணாமலையை கர்நாடகாவுக்கு அழைத்து வரும் ஐடியாவை கொடுத்தவருக்கு நன்றி என்று கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் கட்டுப்பாட்டறை பொறுப்பாளராக பணியாற்றிய சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு பல்வேறு வியூகங்கள் இருந்தாலும் அதில் முக்கிய ஆளாக சசிகாந்த் செந்தில் பெயர் அடிபடுகிறது. ஆமாம்.. காங்கிரஸ் கட்சிக்கு பாதி சதவீதம் தேர்தல் வியூகத்தையும் இவர் வகுத்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சசிகாந்த் செந்தில் 2019 இல் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் 2020 ஆம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். அதற்கு முன்பு சித்ரதுர்கா மற்றும் ராய்ச்சூரில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது அடிமட்ட மக்களின் பிரச்சனைகளை அறிந்து தீர்த்து வந்துள்ளார். நடுத்தர மக்களின் தேவை மற்றும் அவர்களது குறைகள் தெரிந்திருந்ததால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரிக்க உதவியாக இருந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 5 வாக்குறுதிகளை உருவாக்க அந்த அனுபவம் சசிகாந்த் செந்திலுக்கு பயனுள்ளதாக இருந்துள்ளது.
5 தேர்தல் வாக்குறுதிகள்
1. ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குதல்
2. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 2,000 உரிமைத்தொகை. இதன் மூலம் 1.5 கோடி இல்லத்தரசிகள் பயன்பெறுவார்கள்.
3. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி மாதந்தோறும் இலவசமாக வழங்கப்படும்
4. பட்டப்படிப்பு முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும். டிப்ளமோ முடித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 வழங்கப்படும்.
5. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்
ஆகிய முக்கிய வாக்குறுதிகள் கிரவுண்ட் அளவில் கருத்துக்கள் கேட்கப்பட்டு பின்னர் தயாரிக்கப்பட்டுள்ளன. விலைவாசி உயர்வு, குடும்பங்களின் வருமானம், கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் ஆகிய அடிப்படை தேவைகளை மையப்படுத்தி இந்த வாக்குறுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் வெற்றிக்கு பின்னர் பேட்டியளித்த சசிகாந்த் செந்தில் கூறுகையில் ‘கர்நாடகாவில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை இருந்ததால் காங்கிரசுக்கு கூடுதலாக 20 இடங்கள் கிடைத்துள்ளன. ஜெகதீஷ் ஷெட்டர் போன்ற மூத்த தலைவர்களை அவமானப்படுத்தும் விதமாக பேசி மாநில பாஜகவை ஒழிக்கும் வேலையில் அண்ணாமலை செயல்பட்டுள்ளார் . அண்ணாமலையை கர்நாடகாவுக்கு அழைத்து வரும் ஐடியாவை கொடுத்தவருக்கு நன்றி’ என்று சசிகாந்த் செந்தில் கூறினார்.