பெங்களூரு: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக 65, மஜத 19 இடங்களை மட்டுமே பிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 10-ம் தேதி நடந்தது. இதில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. பாஜக 224, காங்கிரஸ் 223 (ஒரு தொகுதி விவசாயசங்கம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் 207, ஆம் ஆத்மி 217, பகுஜன் சமாஜ் 133, சுயேச்சைகள் 918 உட்பட 2,613 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி, உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கி இருந்தது. பாஜகவும், மஜதவும் பின்னடைவை சந்தித்தன. பெங்களூரு மாநகரம், கடலோர கர்நாடக மாவட்டங்களில் பாஜக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்தது. தனிப் பெரும்பான்மைக்கு தேவையான 113 தொகுதிகளை காங்கிரஸ் எளிதாக கடந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் முன்னால் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
நிறைவாக, காங்கிரஸ் 136 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றது. பாஜக 65 தொகுதிகளிலும், மஜத 19 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றன. பாஜகவில் இருந்து விலகி, தனிக்கட்சி ஆரம்பித்த ஜனார்த்தன ரெட்டி கங்காவதியில் வெற்றி பெற்றார். காங்கிரஸ், பாஜகவில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாக போட்டியிட்ட 3 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக தோல்வியை தொடர்ந்து, முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார்.
முதல்வர் யார்?: காங்கிரஸில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்கான முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது. இருவரும் கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளனர். புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று பெங்களூருவில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள், வெற்றிபெற்ற எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அடுத்த முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.
காங். தலைவர்கள் சோனியா காந்தி, ராகுலுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: கர்நாடகாவில் அமோக வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோரை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வாழ்த்து தெரிவித்தார்.