பிளிப்கார்ட் நிறுவனம் அண்மையில் கோடைகால சிறப்பு தள்ளுபடி விற்பனையை நடத்தியது. ‘Big Savings days’ விற்பனையில் எலக்ட்ரானிக் உள்ளிட்ட பல பொருட்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அந்த தள்ளுபடிகளுக்கு வசூலிக்கப்பட்ட விற்பனைக் கட்டணம் வாடிக்கையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ரூ.10 முதல் வசூலிக்கப்பட்ட அந்த கட்டணம் பேக்கேஜிங் கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டது. இது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் தந்திரம் என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
விற்பனைக் கட்டணம்
பிளிப்கார்டில் அறிவிக்கப்பட்ட தள்ளுபடிகளுக்கு பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக விற்பனைக் கட்டணம் என்ற பெயரில் ரூ.10 செலுத்த வேண்டியிருந்தது. ஆர்டருக்கு ஏற்றார்போல் இந்த கட்டணம் மாற்றமடைந்தது. இதனைப் பார்த்த வாடிக்கையாளர்கள் இது என்ன புதுக்கட்டணம் என்ற கேள்வி எழுப்பினர். தள்ளுபடியை அறிவித்துவிட்டு எக்ஸ்டரா பணம் வாங்குவது, சலுகைக்கு எதிராக அமைவதாக அவர்கள் குற்றச்சாட்டினர்.
பிளிப்கார்ட் சொன்னது என்ன?
கோடை சிறப்பு தள்ளுபடி விற்பனைக் காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட பொருளை நீங்கள் வாங்கும் போதெல்லாம், உங்களின் மொத்த பில்லில் ரூ.10 பெயரளவு கட்டணம் சேர்க்கப்பட்டிருந்தது. ஒரு முறை விற்பனைக் கட்டணமான ரூ. 10 உடன் நீங்கள் சிறந்த ஒப்பந்தங்களை அனுபவிக்கலாம். 20 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் இதுவரை சிறந்த ஒப்பந்தங்கள் மூலம் 20 கோடி ரூபாய்க்கு மேல் சேமித்துள்ளனர் என பிளிப்கார்ட் தெரிவித்தது. எத்தனை பொருட்கள் வாங்கினாலும், ஆர்டர் செய்தாலும் ஒரு முறை மட்டும் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்று சொல்லப்பட்டது.
வாடிக்கையாளர் அதிருப்தி
(@arshsisodiya) May 3, 2023
டிவிட்டரில் குற்றம்சாட்டிய யூசர் ஒருவர், வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்க மற்றொரு வழி என கடுமையாக சாடினார். மற்றொருவர், தள்ளுபடியில் கூட இல்லாத தயாரிப்புகளுக்கு Flipkart விற்பனைக் கட்டணத்தை வசூலிக்கிறது என தெரிவித்தார்.
(@CrisONViper) May 3, 2023
ரூ.10 விற்பனைக் கட்டணமும், ரூ.40 ஷிப்பிங் கட்டணமும் செலுத்திய பிறகும், உடைந்த தயாரிப்பு கிடைத்தது ஏமாற்றத்தை கொடுப்பதாக இன்னொருவர் கூறினார். இன்னும் சிலர் இதனை நியாயமற்றது என்றும், சிறிய தொகையாக இருந்தாலும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பது மிகப்பெரிய தொகையாக மாறும் என தெரிவித்துள்ளனர்.
பிளிப்கார்ட் விளக்கம்
இது குறித்து விளக்கம் கொடுத்த பிளிப்கார்ட், விற்பனைக் கட்டணம் தொடர்பான உங்கள் கவலையை நாங்கள் புரிந்துகொள்கிறோம். சிறந்த சலுகைகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு இது பெயரளவு கட்டணம் மட்டுமே. மேலும், விற்பனையின் போது உங்களின் முதல் ஆர்டருக்கு மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும் என கூறியுள்ளது.