முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.மு.மு.க தலைவர் டி.டி.வி.தினகரனைச் சந்தித்துப் பேசி அவருக்கு ஆதரவளித்தது, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இந்த நிலையில், பிரபல ஊடகத்துக்கு டி.டி.வி.தினகரன் பிரத்யேக பேட்டியளித்தார் அதில் பேசிய அவர், “தி.மு.க-தான் எங்களுக்கு எப்போதும் பொது எதிரி, எடப்பாடி பழனிசாமி துரோகி. சுய நலனுக்காகத்தான் தலைமை பதவியில் இருக்க வேண்டும் என நினைக்கிறார். பணம் இருக்கும் தைரியத்தால் தவறான செயல்களில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார்.
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க-வைக் கூட்டணியில் சேர்க்கலாம் என்று அமித் ஷா தெரிவித்திருக்கிறார். அ.ம.மு.க-வைக் கூட்டணியில் சேர்க்காவிட்டால் 80 தொகுதிகளில் பின்னடைவை ஏற்படுத்தும் என அனைவரும் தெரிவித்திருக்கிறார்கள். இருப்பினும் எடப்பாடி பழனிசாமி அதனை மறுத்திருக்கிறார். இந்தத் தகவலை ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் என்னிடம் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி கூட்டத்திடம் நியாயம் இல்லை, உண்மை இல்லை. எங்களிடம் உண்மை இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வமும் நானும் சுயநலத்துக்காக, பலவீனமாக இருக்கிறோம் என்பதால் இணையவில்லை. ஜெயலலிதாவின் கொள்கை மற்றும் ஆட்சியை தமிழ்நாட்டில் மீண்டும் அமைக்கும் முயற்சியில்தான் இணைந்திருக்கிறோம். ஓ.பி.எஸ்-ஸுடனான சந்திப்பு குறித்து சசிகலாவிடம் நான்எதுவும் பேசவில்லை.
ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுடன் தற்போது பேசிக் கொண்டிருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க-வை இணைவதற்குத் தற்போது எடப்பாடி பழனிசாமி தடையாக இருக்கிறார் என்பது ஊரறிந்த விஷயம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
News Source : News 18