திருவனந்தபுரம்: துல்கர் சல்மான் நடிப்பில் சீதா ராமம், சுப் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.
இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்துள்ள கிங் ஆஃப் கோதா திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், துல்கர் சல்மான் நடிக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தனுஷ் பட இயக்குநருடன் துல்கர் சல்மான் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.
தனுஷ் பட இயக்குநருடன் துல்கர் சல்மான்
மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான், முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் துல்கர் சல்மான் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு துல்கர் நடிப்பில் தமிழில் ஹேய் சினாமிகா, மலையாளத்தில் சல்யூட், தெலுங்கில் சீதா ராமம், இந்தியில் சுப் ஆகிய படங்கள் வெளியாகின.
இவைகளில் ஹேய் சினாமிகா தவிர மற்ற படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்தன. முக்கியமாக தெலுங்கில் உருவாகி 4 மொழிகளில் வெளியான சீதா ராமம் ப்ளாக் பஸ்டர் ஹிட் என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல், சுப் திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து தற்போது கிங் ஆஃப் கோதா என்ற படத்தில் துல்கர் நடித்து வருகிறார்.
தமிழ்நாட்டின் காரைக்குடி பகுதிகளில் நடைபெற்ற கிங் ஆஃப் கோதா படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷுக்கு சூப்பர் ஹிட் கொடுத்த வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் துல்கர் சல்மான் இணையவுள்ளாராம்.
தனுஷ், சம்யுக்தா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்த வாத்தி திரைப்படம், கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்தது. இதனால், மீண்டும் தனுஷ் – வெங்கி அட்லூரி கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெங்கி அட்லூரி துல்கர் சல்மானுக்கு கதை சொல்லி கால்ஷீட்டும் வாங்கிவிட்டாராம்.
அதன்படி, துல்கர் சல்மான் – வெங்கி அட்லூரி இணையும் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கவுள்ளதாம். அதேபோல் இந்தப் படத்தை அடுத்தாண்டு சம்மரில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்தப் படம் மலையாளம், தெலுங்கு மொழிகளில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், இதுவரை படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.