என்ன கொடுமை இது.. கேரளாவை போலவே ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து.. 10-க்கும் மேற்பட்டோர் மாயம்

விசாகப்பட்டினம்:
கேரளாவில் சில தினங்களுக்கு முன்பு நடந்த கோர சம்பவத்தை போல, ஆந்திராவிலும் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். 2 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கோடை விடுமுறை என்பதால் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. உற்சாக மிகுதியாலும், சிலரின் பேராசையாலும் ஆங்காங்கே விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன.

அந்த வகையில், கேரளா மாநிலம் மலப்புரத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த படகு விபத்து நாட்டையே உலுக்கியது. அங்குள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தீர்த்தம் ஆற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா படகு ஒன்று 40 பேருடன் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆறும், கடலும் சங்கமிக்கும் இடத்தில் படகு சென்று போது திடீரென தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். விசாரணையில், அந்த சுற்றுலா படகுக்கு லைசென்ஸ் இல்லாததும், 10 பேர் போக வேண்டிய படகில் 40 பேரை ஏற்றியதே விபத்துக்கு காரணம் எனவும் தெரியவந்தது.

இதனிடையே, இந்த சோக சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாக தற்போது ஆந்திராவில் அதே போன்ற பயங்கர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஆந்திர மாநிலம் நந்தியாலாவில் உள்ள அவுக்கு ஏரி பிரபல சுற்றுலா தலமாக விளங்குகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்களில் பலர் அந்த ஏரியில் உள்ள சுற்றுலா படகில் ஏறி பயணித்தனர். அதன் ஒருபகுதியாக, ஒரு படகில் 15-க்கும் மேற்பட்டோர் சென்றனர்.

இந்நிலையில், ஏரியின் நடுவில் சென்ற போது படகு திடீரென கவிழ்ந்தது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் இதுகுறித்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் கஷ்டப்பட்டு நீந்தி கரை சேர்ந்தனர். மற்றவர்கள் நீரில் மூழ்கினர்.தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்புப் படையினர் 2 குழந்தைகளின் உடலை மீட்டனர். மாயமான 10-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர். சம்பந்தப்பட்ட படகின் உரிமையாளரையும், ஓட்டுநரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.