கும்பகோணம்: சர் ஆர்தர் காட்டனின் (மே-15 ம் தேதி) பிறந்த நாளான இன்று நீர்ப்பாசன மேலாண்மை தினமாக அறிவித்து முக்கொம்பு-அணைக்கரையில் அவரது சிலைகளை நிறுவ வேண்டும் என்று தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், ‘ஆங்கிலேய பொறியாளர் இந்தியாவின் நவீன நீர்ப் பாசன தந்தை என்றழைக்கப்படும் சர் ஆர்தர் காட்டன், கடந்த 1822-ம் ஆண்டு முதல் 1872-ம் ஆண்டு வரை பல்வேறு நீர்ப் பாசன திட்டங்கள், கதவணைகள் உள்ளிட்டவைகளை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தினார். இவர், ஆந்திராவில், கோதாவரி கிருஷ்ணா டெல்டா மாவட்டங்களில் ஏராளமான ஏரிகள், கதவணைகள் ஆகியவற்றைப் புதிதாக புனரமைத்து தென்னிந்தியாவில் உணவு உற்பத்தியைத் தன்னிறைவு அடையச் செய்துள்ளார்.
கரிகால சோழன் கட்டிய கல்லணையைப் பார்த்து வியந்து, கிராண்ட் அணைக்கட் எனப் பெயர் சூட்டி, 1830-ம் ஆண்டு கல்லணையைப் புனரமைத்து, காவிரி சமவெளி மாவட்டங்களைத் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக்கினார். இவர், 1836-ம் ஆண்டு திருச்சி மாவட்டம், முக்கொம்பில் மேலணையையும், 1840-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை கொள்ளிடத்தில் கீழணையையும் கட்டுமானம் செய்தார். மேலும், வீராணம் ஏரியை புனரமைத்து, சென்னைக்கான குடிநீர் வசதியையும், இன்றைக்கு கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் சாகுபடிக்கான தண்ணீர் வசதியையும் மேம்படுத்தினார்.
இதே போல், இவர் கடந்த 1835-ம் ஆண்டு முல்லைப் பெரியாறு, மேட்டூர் அணைகளுக்கு வரைவு திட்டங்களை வழங்கியுள்ளார். இவர் கடந்த 1853-ம் ஆண்டு சென்னை மாகாணத்தினுடைய பொதுப்பணித் துறையின் முதல் தலைமை பொறியாளராக பணியாற்றியுள்ளார். தமிழகத்திற்கு மட்டுமின்றி தென்னிந்தியாவிற்கே பல தொலை நோக்குத் திட்டங்களைச் செயல்படுத்திய இவரது பிறந்த நாளான (இன்று) மே-15-ம் தேதியை, தமிழக அரசு, நீர்ப்பாசன மேலாண்மை நாளாக அறிவித்து, முக்கொம்பு மற்றும் அணைக்கரையில் அவரது உருவச் சிலைகளை அமைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.