கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மூலம் தென்னிந்தியாவில் ஆட்சியிலிருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவை பா.ஜ.க இழந்திருக்கிறது. காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து சிவசேனா(உத்தவ்) எம்.பி சஞ்சய் ராவுத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “கர்நாடகா தேர்தல் முடிவுகள், மக்கள் சர்வாதிகாரத்தை முறியடிப்பார்கள் என்பதைக் காட்டுவதாக அமைந்திருக்கின்றன. கர்நாடகாவில் வெற்றி பெற்றிருப்பதன்மூலம் பஜ்ரங் பலி காங்கிரஸ் கட்சியுடன் இருப்பது உறுதியாகியிருக்கிறது. பா.ஜ.க-வுடன் பஜ்ரங் பலி இல்லை. பா.ஜ.க தோற்றால் வன்முறை ஏற்படும் என்று நமது உள்துறை அமைச்சர் (அமித் ஷா) சொன்னார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கர்நாடகா அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எங்கு கலவரம் நடக்கிறது… இப்போது மோடி அலை முடிந்துவிட்டது. நாடு முழுவதும் எங்களது அலை வந்து கொண்டிருக்கிறது. 2024-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலுக்கு நாங்கள் தயாராவது தொடங்கிவிட்டது. சரத் பவார் தலைமையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதில் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்தக் கூட்டத்தில் சரத் பவார், உத்தவ் தாக்கரே, நானா பட்டோலே, அஜித் பவார், பாலாசாஹேப் தோரட் மற்றும் பிற தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.
இன்று மாலையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் சிவசேனா தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்த தீர்ப்பு, மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூன்று கட்சிகளின் தலைவர்களும் ஆலோசிக்கின்றனர். சமீபத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஒருவர்மீது ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டிருந்தனர். இன்றையக் கூட்டத்தில் அந்தக் கருத்துவேறுபாடுகள் களையப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.