இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், முன்னெப்போதும் இல்லாத அளவு ஜனநாயகம் மிகவும் மோசமாக உள்ளது. நீதித்துறை மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது என பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
அல் காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு இரண்டு வாரங்கள் ஜாமின் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், டிவி ஒன்றுக்கு இம்ரான் கான் அளித்த பேட்டி:ஜனநாயகம் முன் எப்போதும் இல்லாத அளவு மோசமாக உள்ளது. நீதித்துறை மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது. தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பீதியில் பாகிஸ்தான் அரசு உள்ளது.
இதனால், நான் சிறையில் அடைத்து அல்லது கொலை செய்து தேர்தலை நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர். இது போன்று 2 முறை முயற்சி நடந்துள்ளது எனக்கூறினார்.
பாக்., ஆட்சியாளர்களுக்கு இம்ரான் கான் எச்சரிக்கை
முன்னதாக, இம்ரான் கான் அறிக்கை ஒன்றில்கூறியதாவது: கிழக்கு பாகிஸ்தானில் என்ன நடந்தது, அங்கு நடத்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்து நாம் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். அங்கு, தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி, ஆட்சி அமைக்க அனுமதிக்கப்படவில்லை. அதற்கான உரிமை பறிக்கப்பட்டது.
அதனால், நாட்டின் பாதிப்பகுதியை இழந்துவிட்டோம். நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை நாம் எண்ணி பார்க்கக்கூட முடியாது. இதற்கு முக்கிய காரணம், பூட்டிய அறைக்குள் முடிவு எடுப்பவர்களுக்கு, உலகின் மற்ற நாடுகள் எடுக்கும் முடிவு தெரிவது இல்லை.
அப்போதைய ஆட்சியாளர்கள், தங்கள் செய்த தவறு காரணமாக ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்ய மக்களை அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் வெளியாகவில்லை. 25 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் அந்த அறிக்கை வெளியானது. அந்த வகையில் தான் நாடு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க நான் கிழக்கு பாகிஸ்தானுக்கு சென்று இருந்தேன். அப்போதைய ஆட்சியாளர்கள், கிழக்கு பாகிஸ்தான் மீது வெறுப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இன்று போல், அன்றும் மீடியாக்கள் முழுவதும், அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால், நடந்தது என்ன என்பது கூட தெரியாமல் இருந்தோம். ஆனால், இன்று சமூக வலைதளங்கள் உள்ளன. அரசு அதனையும் மூட உத்தரவிட்டு உள்ளது.
தங்கள் சொந்தக்கதைகளை சொல்லவும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வன்முறையாளர்கள் என முத்திரை குத்தவும், சமூக வலைதளங்கள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. நாட்டிற்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை நாம் எண்ணி பார்க்க முடியாது. இவ்வாறு இம்ரான் கான் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்