தஞ்சாவூர்: ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்ற தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், அன்னையர் தினத்தில் தாயையும், குழந்தைகளையும் வாழ்த்தி ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்கினார்.
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட சீனிவாசபுரம் வடகரைப் பகுதியில் வசிக்கும் கார்த்திகேயன் – திலகா தம்பதியினருக்கு திருமணம் நடந்து 6 ஆண்டுகள் கழித்து கடந்த மார்ச் மாதம் ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. அன்னையர் தினத்தை முன்னிட்டு இன்று (மே 14) தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், 3 குழந்தைகளின் தாயான திலகாவுக்கு ஊட்டச்சத்துப் பையை அவரது வீட்டுக்கே சென்று கொடுத்து அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தஞ்சாவூர் சீனிவாசபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பகால பரிசோதனைகளை திலகாவுக்கு மேற்கொண்ட மருத்துவ குழுவினர் ஒரே சமயத்தில் 3 சிசுக்கள் கருத்தரிப்பதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து சீனிவாசபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார செவிலியர் ஜனனி முறையான கர்ப்பகால பரிசோதனைகள் மற்றும் தொடர் கண்காணிப்பை திலகாவுக்கு செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 22ம் தேதி ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து திலகாவுக்கு 3 ஆண் குழந்தைகள் அரசு இராசா மிராசுதாரர் மருத்துவமனையில் பிறந்தன. முதல் குழந்தை 1.5 கிலோ, இரண்டாவது குழந்தை 1.3 கிலோ, மூன்றாவது குழந்தை 1 கிலோ என்ற அளவில் பிறந்தன. இதனையடுத்து செவிலியர் ஜனனி, திலகாவுக்கு மகப்பேறுக்குப் பிந்தைய கவனிப்பு காலத்தில், இல்லம் ரீதியான சிசு பராமரிப்பு மற்றும் கவனிப்பு திட்டத்தின் கீழ், சிசுவின் எடை அளவு, தாய்ப்பாலின் முக்கியத்துவம், தடுப்பூசி உள்ளிட்டவற்றை முறையாக 1, 3, 7, 14, 21, 28 மற்றும் 42 ஆகிய நாட்களில் மேற்கொண்டதால் 3 குழந்தைகளின் எடையும் தற்போது 1.8 கிலோ, 1.7 கிலோ, 1.4 கிலோ என்ற அளவில் அதிகரித்து நலமுடன் இருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று திலகாவின் வீட்டுக்குச் சென்ற மேயர் சண்.ராமநாதன், திலகாவின் கணவர் கார்த்திகேயன் ஒரு மாற்றுத்திறனாளி என்பதாலும் அவர்களின் குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டும் அவர்களுக்கு தேவையான வாழ்வாதார முன்னேற்ற உதவிகளை செய்து தருவதாக தெரிவித்ததோடு, அர்ப்பணிப்புடன் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ குழுவினருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார். அன்னையர் தினத்தில் நடைபெற்ற இந்த நெகிழ்வான சந்திப்பை அறிந்த அந்தப் பகுதி பொதுமக்களும், திலகாவின் உறவினர்களும் மேயருக்கு நன்றி தெரிவித்தனர்.