நாடுமுழுவதும் சர்சையை ஏற்படுத்தி பேசுபொருளாகியிருந்த ‘தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்’, ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ போன்ற படங்களை இயக்கியவர் விவேக் அக்னிஹோத்ரி.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிட்டு வரும் இவர், `இன்றைய காலத்தில் மக்கள் புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்துக்கொள்வதற்காவேத் திருமணம் செய்து கொள்கிறார்கள்’ என்று பேசியிருப்பது சர்ச்சையை சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “‘இன்றைய காலத்தில் மக்கள் திருமண புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்துக்கொள்வதற்காகவே திருமணம் செய்து கொள்கிறார்கள். `திருமணத்தின் நோக்கமே சும்மா ஷோ காட்டுவதற்காக என மாறிவிட்டது’ என்று திருமணப் புகைப்படக்காரர் ஒருவர் என்னிடம் கூறினார். இவை உண்மைதான். ஒருமுறை நான் இதுபோன்ற திருமணம் ஒன்றிற்கு சென்றிருந்தபோது புகைப்படக்காரர் வருவதற்குத் தாமதமானதால் மணமக்கள் மயக்கமடைந்தே விட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பலரும் பலவிதமாக கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர், “இன்றைய திருமணங்கள் அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது” என்றும் இன்னும் சிலர், “நான் சென்றிருந்த திருமணத்தில் புகைப்படம் சரியாக எடுக்கவில்லை என திருமண சடங்குகளை இரண்டுமுறை செய்தார்கள்” என்று பதிவிட்டுள்ளார். அதற்கு விவேக் அக்னிஹோத்ரி. “என்னால் இதை முழுமையாகக் காட்சிப்படுத்த முடிகிறது” என்று பதிலளித்துள்ளார். இதுபோல் பலரும் தங்கள் அனுபவங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.