வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
துடில்லி:காலனியாதிக்கத்தின்போது எடுத்துச் செல்லப்பட்ட கோஹினுார் வைரம் உள்ளிட்ட புராதன கலைப் பொருள்களை மீட்பதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக
ஈடுபட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட, கடத்தப்பட்ட, திருடப்பட்ட பழங்கால கலை பொருள்களை ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
கலைப் பொருள்கள்
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின், இந்த முயற்சி தீவிரம் அடைந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, பல நாடுகளில் இருந்து, 251 புராதான, கலைப் பொருள்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.இவற்றில், 238 பொருள்கள் மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த, 2014க்குப் பின் பெறப்பட்டவை. இதைத் தவிர அமெரிக்கா, பிரிட்டனில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பொருள்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கையும் நடந்து வருகிறது.
தற்போது பிரிட்டனுடனான இரு தரப்பு, துாதரக மற்றும் வர்ததக உறவுகளில், இந்த விஷயத்துக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் தருவதாக, பிரிட்டனைச் சேர்ந்த
பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன் ஒரு பகுதியாக, தனிநபர்கள் மற்றும் சிறிய அமைப்புகளிடம் உள்ள இந்தியாவைச் சேர்ந்த கலைப் பொருட்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து பெரிய அமைப்புகள் மற்றும் பிரிட்டன் அரசிடம் உள்ள பொருள்களை பெறுவதற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
குறிப்பாக, 105 காரட் மதிப்புள்ள, கோஹினுார் வைரத்தை மீட்பது, மோடி அரசின் முன்னுரிமையாக உள்ளதாக, செய்திகள் குறிப்பிடுகின்றன. பல அரசர்களிடம் கைமாறிய இந்த வைரம், மஹாராஜா ரஞ்சித் சிங்கிடம் இருந்து பிரிட்டன் ராணியாக இருந்த எலிசபெத்துக்கு வழங்கப்பட்டது.இந்த கோஹினுார் வைரம் உட்பட, பிரிட்டனின் அருங்காட்சியகங்களில் உள்ள இந்தியாவின் பாரம்பரியம், வரலாற்றை பறைசாற்றும் பொருள்களை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக, அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement