கொடைக்கானல்: மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று (மே 14) மாலை கொடைக்கானலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தார். நாளை (மே 15) அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்ய உள்ளார்.
சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் இன்று (மே 14) காலை ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தார். அங்கிருந்து கார் மூலம் வத்தலக்குண்டு வழியாக மாலை 5.30 மணிக்கு கொடைக்கானல் வந்தார். முன்னதாக பிற்பகல் 1.30 மணிக்கு அம்மையநாயக்கனூர் அரசு விருந்தினர் மாளிகையில் அவரை திண்டுக்கல் டிஆர்ஓ லதா, டிஐஜி அபிநவ் குமார், எஸ்பி பாஸ்கரன் ஆகியோர் வரவேற்றனர். அங்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலையில் கொடைக்கானலுக்கு வந்த அவரை மாவட்ட ஆட்சியர் விசாகன், அன்னை தெரசா பல்கலை கழக துணை வேந்தர் கலா உள்ளிட்டோர் வரேற்றனர்.
இரவு கொடைக்கானலில் உள்ள கோகினூர் மாளிகையில் தங்கவுள்ளார். நாளை (மே 15) காலை 8 மணிக்கு அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள ரோஜா கார்டன் மற்றும் சூரிய ஆராய்ச்சி கூடத்தை பார்வையிட உள்ளார். தொடர்ந்து, காலை 11 மணிக்கு அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். அங்கு மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். மாலை 3 மணிக்கு மேல் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட உள்ளார். மே 16-ம் தேதி காலை கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
ஆளுநர் வருகையையொட்டி கொடைக்கானல் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆளுநர் வருகையை முன்னிட்டு இன்று (மே 14) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை வத்தலக்குண்டு – கொடைக்கானல் வழியாக எவ்வித வாகனங்களும் மேலே செல்வதற்கும், மேலே இருந்து கீழே இறங்குவதற்கும் அனுமதிக்கவில்லை.
ஆளுநரை கண்டித்து வத்தலக்குண்டில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பழநியில் இருந்து கொடைக்கானல் புறப்பட்ட திராவிடர விடுதலை கழகத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.