ஹவேரி: கர்நாடக முதல்வர் பொறுப்பில் இருந்து வெளியேறும் பசவராஜ் பொம்மை, ஹவேரி மாவட்டத்தில் உள்ள ஷிகோன் தொகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான் பதானை 35,341 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற் கடித்தார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை(63), ஹவேரி மாவட்டத்தின் ஷிகோன் தொகுதியில் போட்டியிட்டார். இவர் 99,073 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அகமது கான் பதான் 63,732 வாக்குகள் பெற்றார். கடந்த 2008, 2013, 2018-ம் ஆண்டு நடந்த சட்டபேரவை தேர்தல்களில், இவர் பாஜக சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்றார். தற்போது 4-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
ஒரு காலத்தில் ஷிகோன் தொகுதி காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. இத்தொகுதியை மதச்சார்பற்ற ஜனதா தளம் கடந்த 1999-ம் ஆண்டு கைப்பற்றியது. கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலில் இங்கு சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். அதன்பின் இத்தொகுதியில் தொடர்ந்து 4 முறை பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றார்.
கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து எடியூரப்பா தலைமையிலான அரசில் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி, 2021-ல் முதல்வரானார்.