முதல்வர், தலைவர்கள் அன்னையர் தின வாழ்த்து – எந்த சூழலிலும் பெற்றோரை கைவிட கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

சென்னை: அன்னையர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், தங்கள் பிள்ளைகளை சாதனையாளராக உருவாக்கிய 10 தாய்மார்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விருது வழங்கி கவுரவித்தார்.

தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் நேற்று (மே 14) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இதில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 10 சாதனையாளர்களின் தாய்மார்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர்.

அந்த வகையில், செஸ் கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவின் தாய் என்.நாகலட்சுமி, பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பொன்ராஜின் தாயார் ஞானசுந்தரி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார் நாகமணி, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷின் தாயார் மீனாட்சி சந்திரசேகரன் உட்பட 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: உலகெங்கிலும் பல மொழிகள் பேசும் தாய்மார்கள் இருந்தாலும், அனைவருமே ஒரே மாதிரியான அன்பு, இரக்கம், கருணைக்கு பெயர் பெற்றவர்கள்தான். ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ என்பது, இளையராஜா இசையில் உருவான அழகான பாடல். அதில் வரும் வரிகள் நிதர்சனமானது.

வளர்ந்து வரும் உலகில் தற்போதைய இளைஞர்கள் தங்கள் பெற்றோரை விட்டுவிட்டு, பல்வேறு நாடுகளுக்கு செல்கின்றனர். நாம் எங்கு, எந்த சூழலில் இருந்தாலும், தாயை கைவிடக் கூடாது. ஒதுக்கிவிட கூடாது. அவர்களுடன் சகஜமாக பேசுங்கள். அதுவே அவர்களுக்கு மகிழ்ச்சி தரும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

தலைவர்கள் வாழ்த்து: அன்னையர் தினத்துக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: அன்னையர் வாழ்வு பாலைவனமாகாமல் சோலைவனமாகவும், நம்மை வளர்த்தவர் வாழ்வு அணைந்து போகாமல், அவர்களுக்கு அனைத்தும் கிடைக்கப் பெறும் வகையில் வாழ்வதே அன்னையருக்கு செலுத்தும் நன்றி.

முதல்வர் ஸ்டாலின்: உடலுக்குள் இன்னொருஉயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும்மேலாக அன்பு செலுத்தும் அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துகள். அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகள், விருப்பங்களை மதிப்போம், நிறைவேற்றுவோம்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: நம்மை இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்திய முதல்கடவுளாய், நற்பண்புகள் நிறைந்தவர்களாக நல்வழிப்படுத்திய ஆசானாய் விளங்கும் அனைத்து அன்னையருக்கும் நல்வாழ்த்துகள்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: குடும்பத்தில் அனைவரையும் இணைக்கும் மையப் புள்ளியாக விளங்கும் தாயின் அன்பு, பெருமை, தியாகங்களை போற்றுவோம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: அன்பு,அறிவு, அனுபவம் மூலம் கிடைத்த பாடம்,எண்ணற்ற தியாகம் செய்து, நம்மை சாதனையாளராக மாற்றுவது அன்னையர்தான். அவர்களின்றி நாம் இல்லை. இந்த உண்மையை மனதில் கொண்டு, எந்நாளும் அவர்களை வணங்குவோம், போற்றுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.