224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடயவுள்ளதை முன்னிட்டு அங்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதன்படி 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் ஆளுங்கட்சியான பாஜக 65 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.
இதனிடையே கர்நாடகாவின் அடுத்த முதல் மந்திரி யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை முதல் மந்திரி வேட்பாளரை அறிவிக்காத நிலையில், டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இடையே முதல் மந்திரி பதவிக்கான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேலிட பார்வையாளர்கள் சுஷில்குமார் ஷிண்டே, ஜிதேந்திர சிங், தீபக் பாபாரியா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேர்தலில் வெற்றிப்பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வரலாற்று வெற்றி கொடுத்த கர்நாடக மக்களுக்கும், கார்கே, ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், கர்நாடக முதல்வரை காங்கிரஸ் தலைமை முடிவு செய்ய எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்க அதிகாரம் வழங்கி கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 135 எம்எல்ஏக்களும் ஒரு மனதுடன் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.