அதிமுகவின் உச்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் கூட அதற்கு க்ரீன் சிக்னல் காட்டி விட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒன்று மட்டும் இன்னும் வர வேண்டியுள்ளது. அதுவும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக முடியவே அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். இந்த சூழலில் அமித் ஷாவை சந்தித்து சசிகலா பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலா – அமித் ஷா சந்திப்பு?எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தன் பக்கமே இருக்கும் வகையில் ஆரம்பம் முதலே பார்த்துக் கொண்டார். பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் அதற்கான பலன்களை அறுவடை செய்தார். எப்படியாவது கட்சிக்குள் சென்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டு சசிகலா காய் நகர்த்திய போதும் அதற்கு எந்தவித பலனும் இதுவரை அமையவில்லை. இந்த நிலையில் தான் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அமித்ஷாவை அவர் சந்தித்ததாக கூறப்படுகிறது.
அதிமுக பலவீனமாக உள்ளதா?சசிகலா – டிடிவி தினகரன் வெளியேற்றத்துக்குப் பின்னர் அதிமுகவின் வாக்கு வங்கி தெற்கு பக்கத்தில் மிகவும் அடிவாங்கியுள்ளது. அண்மையில் ஓபிஎஸ்ஸும் ஓரங்கட்டப்பட்ட நிலையில் பாதி அதிமுகவுடன் தான் நீங்கள் கூட்டணி வைத்திருக்கிறீர்கள், ஓட்டை விழுந்த ஓடத்தில் 2024 மக்களவைத் தேர்தலுக்கு நீங்கள் பயணம் செய்ய முடியாது என்று சசிகலா தரப்பில் டெல்லி மேலிடத்திடம் கூறப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் – டிடிவி தினகரன் சந்திப்பு!நீங்கள் மூன்று பேருமே ஆளுக்கொரு திசையில் நிற்கிறீர்கள் என்று அங்கிருந்து கூறப்பட்ட அதன் பின்னரே பன்னீர், டிடிவி தினகரன் சந்திப்பு நடைபெற்றதாம். விரைவில் ஓபிஎஸ், சசிகலாவையும் நேரடியாக சந்திக்க உள்ளார். மூவர் கூட்டணி அமைந்துவிட்டால் 2024 தேர்தலுக்குள் கட்சிக்குள்ளோ, கூட்டணிக்குள்ளோ இணைய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். 2021 தேர்தலின் போதே அமித் ஷா முன்வைத்த யோசனையை ஏற்க மறுத்து டிடிவி தினகரனின் அமமுகவை கூட்டணிக்குள் இணைக்க எடப்பாடி மறுத்தார்.
பாஜக எடப்பாடி பழனிசாமி சொல்வதை கேட்குமா?ஒருவேளை அவ்வாறு கூட்டணி அமைந்திருந்தால் கூடுதலாக இருபது இடங்கள் அதிமுக கூட்டணிக்கு வந்திருக்கும். இந்த முறை பாஜக அவ்வாறு எடப்பாடி பழனிசாமி சொல்வதை கேட்டுக்கொண்டு இருக்காது. இந்த தேர்தலில் ஒவ்வொரு வெற்றியும் முக்கியமானதாக பாஜக பார்க்கிறது. மூன்றாவது முறையாக ஆட்சியில் அமரவேண்டும் என்றால் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். எனவே அனைவரையும் அரவணைத்து செல்ல பாஜக எடப்பாடி பழனிசாமியை நிர்பந்திக்கும்.
எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி!
எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைகள் இருக்கும் என ட்விஸ்ட் வைக்கின்றனர் அதிமுக-பாஜக உள் விவகாரம் அறிந்தவர்கள். சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் மூவரும் இணைந்து மேடையை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு மாநாடு நடத்தப்பட்டால் அது எதிர்தரப்புக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கும் என்று கணக்கு போடுகிறார்கள். ஒரு பக்கம் மூவர் கூட்டணி, மற்றொரு புறம் டெல்லி மேலிடம்.. இரு தரப்பையும் எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது தான் இப்போதுள்ள கேள்வி.