புதுடெல்லி: டெல்லியில் நடைபெறும் ஜன சக்தி கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். இதில் மனதின் குரல் நிகழ்ச்சியின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இதை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக் காட்சி கூடத்தில் ‘ஜன சக்தி:எ கலேக்டிவ் பவர்’ என்ற தலைப்பில் கண்காட்சி தொடங்கியது.
இதில் மனதின் குரல் நிகழ்ச்சியில் இடம்பெற்ற தண்ணீர் பாதுகாப்பு, வேளாண்மை, விண்வெளி, வடகிழக்கு மாநிலங்கள், பெண்கள்சக்தி உள்ளிட்ட கருப்பொருட்களை பிரதிபலிக்கும் வகையில் நாட்டின் முன்னணி கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
இந்த படைப்புகள் ஓவியங்கள், புகைப்படங்கள், சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பரேக், அதுல் டோதியா, பரேஷ்மைதி உள்ளிட்ட முன்னணி கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சி வரும் 30-ம்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜன சக்தி கண்காட்சியை பார்வையிட்டேன். மனதின் குரல் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட படைப்புகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. தங்கள் படைப்பாற்றல் மூலம் இந்தக் கண்காட்சியை மெருகூட்டி உள்ள கலைஞர்களுக்கு பாராட்டுகள்” என பதிவிட்டுள்ளார்.