சென்னை: வங்கக் கடலில் நிலவிய அதிதீவிர புயல் ‘மொக்கா’ நேற்று வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது. தமிழகத்தில் இன்றும், நாளையும் வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வரை வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர புயல் ‘மொக்கா’ நேற்று தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதிதீவிரப் புயலாகக் கடந்தது. அப்போது அதிகபட்சமாக மணிக்கு210 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் (மே 15, 16) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வரும் 17, 18-ம்தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அதேநேரத்தில், இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரிஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
இன்று இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
14 நகரங்களில் வெயில் சதம்: ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் தலா 105 டிகிரி, கரூர் பரமத்தியில் 104, மதுரை விமான நிலையம், திருச்சி, ஈரோடு, திருத்தணியில் தலா 103, புதுச்சேரி, தஞ்சாவூரில் 102, கடலூர், நாகப்பட்டினத்தில் 101, சேலம், பரங்கிப்பேட்டையில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணனிடம் கேட்டபோது, ‘‘மொக்கா புயலால் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டு, மேற்கிலிருந்து சூடான தரைக்காற்று கடல் நோக்கி ஈர்க்கப்படுகிறது. கடலில் இருந்து வீசும் கிழக்கு திசை காற்று அடியோடு நின்றுவிட்டது. இதனால் கடலோர நகரங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் உள்ள நகரங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
புயல் கரையை கடந்துவிட்ட நிலையில், காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டு கிழக்கு திசைக் காற்று நிலப்பகுதியை நோக்கி வீசத் தொடங்க 4 நாட்கள் வரை ஆகும். அதன்பிறகே, மழை வாய்ப்புகள் அதிகரித்து வெப்பநிலை குறையத் தொடங்கும். அதுவரை வேலூர், திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் 110 டிகிரி, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை நிலவக்கூடும்’’ என்றார்.