CSK v KKR: `மறுபடியும் சியர்ஸா..!' இந்த முறை பி.பி மாத்திரையுடன் கால்குலேட்டரும் தேவைப்படுமா?

பெங்களூரு ரசிகர்களுக்கு கால்குலேட்டர் என்றால், சென்னை ரசிகர்களுக்கு பி.பி டேப்ளெட். நேற்று நடந்த இரண்டு போட்டிகளும் இதை மீண்டும் நிரூபித்திருக்கின்றன. நேற்றைய முதல் போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தானுக்கு எதிராக அபார வெற்றி பெற்றுவிட, மீண்டும் ‘ஈ சாலா’ கோஷங்கள் ஒலிக்கத் தொடங்கின. ‘அந்த அணி இந்த அணியை வெல்லவேண்டும், இந்த அணி அந்த அணியை வெல்ல வேண்டும், ஆனால், எந்த அணியும் இந்த அணியையும் வெல்லக்கூடாது, அந்த அணியையும் வெல்லக்கூடாது’ என அதற்குச் சிக்கலான பல்வேறு நிபந்தனைகள் இருக்கின்றன என்றாலும் கால்குலேட்டரைத் துடைத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கின்றனர் கர்நாடக சிங்கங்கள்.

CSK v KKR

பெங்களூரு ரசிகர்களின் நிலவரம் பார்த்துவிட்டு அப்படியே வந்தே பாரத் ரயில் ஏறி சென்னை பக்கம் வந்தால் அன்பு குகையின் சிங்கங்கள் ஜெயித்து பிளேஆப் சென்றிருக்க வேண்டிய இரவில், ரசிகர்களைச் சோதித்து வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றனர். ஆம், சேப்பாக்கில் இந்த சீசனின் கடைசி லீக் மேட்ச், சென்னைக்குத் தோல்வியில் முடிந்திருக்கிறது.

இதன் மூலம் கொல்கத்தா இன்னும் இந்தத் தொடரில் உயிர்ப்புடன் இருக்கிறது, சென்னையோ டெல்லியுடனான கடைசி போட்டியில் வென்று பிளேஆப் இடத்தை சிரமமில்லாமல் உறுதி செய்யவேண்டும். அந்தப் போட்டிக்கு இன்னும் 5 நாள்கள் உள்ள நிலையில், அதற்குள் இந்த டேபிள் நிலவரம் எப்படியெல்லாம் கலவரமாக மாறும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ‘மறுபடியும் சியர்ஸா…’ என்பதாக பி.பி மாத்திரைகளை ஆர்டர் செய்யக் கிளம்பியிருக்கிறது மஞ்சள் படை.

டாஸ் வென்ற தோனி கடந்த சேப்பாக் போட்டியைப் போலவே இந்த முறையும் பேட்டிங் தேர்வு செய்தார். ஐ.பி.எல்-லின் பிற்பாதியில் சென்னை பிட்ச்சில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் இப்போது இது `பேட் பர்ஸ்ட்’ களம் என்றும் குறிப்பிட்டார். வழக்கம்போல டீமில் எந்த மாற்றமும் இல்லை. கொல்கத்தா கேப்டன் நித்திஷ் ராணாவும் “பேட்டிங்தான் தேர்ந்தெடுத்திருப்பேன்” என்று தெரிவித்தார். அந்த அணியில் அனுகுள் ராய்க்குப் பதிலாக வைபவ் அரோரா.

CSK v KKR

ருதுராஜ் – கான்வே ஜோடி பவர்ப்ளேயை மெதுவாகவே அணுகியது. இப்படிச் சொல்வது லாஜிக்கா என்பதுகூட தெரியவில்லை. காரணம், மொத்த ஆட்டத்தையுமே சென்னை இப்படித்தான் அணுகியது. ஓவருக்கு ஒரு பவுண்டரி என்பதாக கேப்பில் கிடா வெட்டிக் கொண்டிருந்த ஓப்பனர்களில் ருதுராஜ் கெய்க்வாட்டை 17 ரன்களுக்கு வெளியே அனுப்பினார் தன் முதல் ஓவரை வீசிய வருண் சக்ரவர்த்தி. பவர்ப்ளே முடிவில் சென்னை 52/1 என்று இருந்தது சற்றே ஆறுதலான ஸ்கோர்தான்.

8வது ஓவரில் மீண்டும் அட்டாக் செய்த வருண், ரஹானேவை அனுப்ப, சென்னை 8 ஓவர்களில் 61/2 என்று சற்றே தடுமாறத் தொடங்கியது. ஸ்பின்னுக்கு எதிராகச் சிறப்பாக வாள் வீசும் ஷிவம் துபே இறங்காமல் அம்பதி ராயுடு இறங்கினார். ரொம்ப நேரமாக 100 ஸ்ட்ரைக் ரேட் என்பதாகக் கோடு போட்டு வாழ்ந்து கொண்டிருந்த கான்வே 30 ரன்களில் வெளியேறினார். ‘சரி, இனி அடிதடி மோடுதான்’ என சென்னை ரசிகர்கள் குஷியாக, அதற்கான அறிகுறியே இல்லாமல் சோதித்தனர் மீதியுள்ள பேட்டர்கள்.

தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் அடுத்த ஓவரிலேயே நரைனின் சுழலில் ஸ்டம்பைப் பறிகொடுத்தார் ராயுடு. அதே ஓவரின் கடைசி பந்தில் தன் கேரம் பாலின் மூலம் மொயின் அலியைத் திணறடித்து பவுல்டு ஆக்கினார் நரைன். சரி, ஜடேஜாவின் ஃபார்மை மனதில் வைத்து இப்போதாவது தோனி இறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தால், ஜட்டுதான் இறங்கினார். தோனியின் பிட்னஸ் இதற்கு ஒரு காரணம் என்றால், அது அணிக்குச் சிக்கலான விஷயமே! அதை மேலும் உறுதிசெய்வது போலவே இருந்தது ஜடேஜாவின் பேட்டிங்.

CSK v KKR

ஆசைக்கு ஒரு சிக்ஸர் அடித்துவிட்டு துபே அமைதியாகிவிட, அதன் பிறகு சென்னை ஸ்லோமோஷனில் ஆடத் தொடங்கியது. ஸ்பின்னிலும் கூடுதலாக அடக்கி வாசித்துச் சோதித்தனர். குறிப்பாக 13 – 15, அந்த 3 ஓவர்களில் வெறும் 11 ரன்கள், அதையும் சிங்கிள் சிங்கிளாக மட்டுமே ஓடி எடுத்திருந்தனர். “தூங்குங்க… தோனி வந்தா எழுப்பறேன்” என்பதாக சேப்பாக்கில் அம்மாக்கள் தங்கள் பிள்ளைகளிடம் சத்தம் போட, அப்பாக்களே குறட்டைதான் விட்டுக்கொண்டிருந்தனர்.

16 ஓவர்கள் முடிந்த டைம் அவுட் பிரேக்கில்தான் ஸ்கோர் போர்டையே பார்த்தார்கள்போல! வந்தவுடன் ஜடேஜா ஒரு சிக்ஸ், துபே ஒரு சிக்ஸ் அடித்தனர். அடுத்து வருண் வீசிய ஓவரிலேயே துபே மீண்டும் ஒரு சிக்ஸ். டெத் ஓவரில் இரண்டு ஸ்பின்னர்கள் ஒவ்வொரு ஓவர் வீசி 31 ரன்களைக் கொடுத்திருந்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக அமைந்தன பாஸ்ட் பௌலர்கள் வீசிய கடைசி இரண்டு ஓவர்கள். தாக்கூர் வீசிய 19வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே!

ஸ்லோ ஓவர் ரேட் அடிப்படையில் கடைசி ஓவரில் ஒரு ஃபீல்டர் கூடுதலாக சர்க்கிளுக்குள் நிற்க வேண்டும் என்று அம்பயர்கள் தெரிவிக்க, ராணாவின் முகம் சிவந்தது. சரி, இந்த வாய்ப்பையாவது நல்லதொரு பார்ட்னர்ஷிப்பை அமைத்திருக்கும் துபே – ஜடேஜா பயன்படுத்திக்கொள்ளும் என நினைத்தால், பவுண்டரியை யாருமே தொடவில்லை. கடைசி இரண்டு பந்துகளுக்கு வந்த தோனியும் ஏமாற்றவே செய்தார்.

CSK v KKR

20 ஓவர் முடிவில் 144/6. 145 ரன்கள் எல்லாம் சர்வ சாதாரணம் என்றாலும் தோனியின் கேப்டன்ஸி மாற்றங்களை உண்டாக்கலாம் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்கு ஏற்றவாறு ஒரு நல்ல தொடக்கமும் தீபக் சஹார் மூலமாக அமையவே செய்தது.

ஜேசன் ராய், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஓப்பனர்களாகக் களம் கண்டனர். தீபக் சஹார் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்திலேயே குர்பாஸ் சிக்ஸுக்கு ஆசைப்பட, தேஷ்பாண்டேவிடம் பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இம்பேக்ட் பிளேயராக வெங்கடேஷ் ஐயர் உள்ளே வந்தார். ‘தம்பி அண்ணனுக்கு ரெண்டு பால் போடுப்பா’ என்று கேட்கும் ஏரியா அண்ணன்கள் போலவே, ஆசைக்கு இரண்டு பவுண்டரிகள் அடித்துவிட்டு, அடுத்த சஹார் ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மீண்டும் 4வது ஓவர் வீசிய சஹார், ஜேசன் ராயையும் வெளியே அனுப்பிவிட, ஸ்கோர் 33/3. ‘இந்த மேட்ச் நமக்குத்தான்’ என்பதாக சேப்பாக்கம் அலறியது.

ஆனால், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் நித்திஷ் ராணா, அதிரடி பினிஷர் ரிங்கு சிங் இருவரும் நிலைமையை உணர்ந்து பொறுப்புடன் ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார். அதிக ரன்கள் தேவையில்லை என்பதால் தவறான பந்துகளை மட்டும் பவுண்டரிகளாக மாற்றிவிட்டு மற்ற பந்துகளில் ஸ்ட்ரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்தனர். ஆங்காங்கே வந்த இரண்டு தொடர் பவுண்டரிகள், இடைவெளிவிட்டு அடிக்கப்பட்ட சிக்ஸர்கள் தேவைப்படும் ரன்ரேட்டுக்கு அதிகமாகவே கொல்கத்தாவின் ஸ்கோர் இருக்குமாறு பார்த்துக்கொண்டது.

CSK v KKR

டெத் ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே தேவை. கையில் 7 விக்கெட்டுகள். 33/3 என்பதிலிருந்து 126/3 என்பதாக ஆடி, குறைவான ஸ்கோரை எப்படி சேஸ் செய்யவேண்டும் எனப் பாடம் எடுத்தது இந்த ஜோடி. 54 ரன்கள் அடித்திருந்த ரிங்கு சிங், 18வது ஓவரில் ரன் அவுட்டாக, அதனால் எந்தப் பயனும் இல்லை. அடுத்த ஓவரிலேயே பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்தார் கேப்டன் ராணா. ரிங்கு சிங் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த சீசனில் சேப்பாக்கில் நடைபெறும் கடைசி லீக் போட்டி இது என்பதால் அதையொட்டி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘நன்றி கூறும் நிகழ்வு’ ஒன்று நடைபெற்றது. `Yellorukkum Nandri’ – மீண்டும் சந்திப்போம் என்கிற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் மைதானம் முழுவதும் வைக்கப்பட்டிருந்தன, ரசிகர்களுக்கு சில பரிசுப்பொருள்களும் வழங்கப்பட்டன. அது மட்டுமே அவர்களுக்குக் கிடைத்த ஒரே ஆறுதல்!

CSK v KKR

எது எப்படியோ, அடுத்து சென்னை ஆடவிருக்கும் போட்டிக்கு முன்னரே எந்தெந்த அணிகள் என்ன நிலவரம், சென்னை என்ன செய்ய வேண்டும் என்பது ஓரளவுக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும் சென்னை டாப் 2-வில் முடிப்பதற்கான வாய்ப்பைப் பெற, டெல்லியுடன் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லாவிட்டால் பி.பி மாத்திரையுடன் கால்குலேட்டரை சென்னை ரசிகர்களும் தேட வேண்டியதிருக்கும்.

கூடுதல் சோகமாக, சென்னை வெளியேறவும் இன்னும் வாய்ப்புகள் உண்டு. பார்த்துப் பண்ணுங்க பாய்ஸ்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.