சென்னை: இந்தியாவின் பல நகரங்களிலும் கடந்த இரு மாதங்களாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக சிஎஸ்கே – கேகேஆர் அணிகளுக்கு இடையேயான மேட்ச் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது.
நேற்றைய இரண்டாவது போட்டியாக இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிப் பெற்றது.
இந்நிலையில், CSK Vs KKR அணிகளுக்கு இடையேயான போட்டியை கோலிவுட் திரை பிரபலங்கள் பார்த்து ரசித்தனர்.
IPL மேட்ச் பார்க்க குவிந்த பிரபலங்கள்
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் இரு மாதங்களாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 10 அணிகள் விளையாடும் இந்த ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். தல தோனிக்காக மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டியைப் பார்க்க ரசிகர்கள் படை திரண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் 61வது மேட்ச் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இது நேற்றைய தினத்தின் இரண்டாவது போட்டியாகும். முன்னதாக ஜெய்ப்பூரில் மாலை 3.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணியை கோலியின் பெங்களூர் அணி வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு சென்னை – கொல்கத்தா அணிகள் மோதின.
இதில், டாஸில் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து செகண்ட் பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை விரட்டிப் பிடித்தது.
இதனால், கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. இந்நிலையில், இந்தப் போட்டியை பார்க்க கோலிவுட் திரை நட்சத்திரங்கள் சேப்பாக்கத்தில் குவிந்தனர். இதில், எப்போதும் போல லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது காதல் கணவர் விக்னேஷ் சிவனும் சேப்பாக்கம் மைதானம் வந்திருந்தனர். அவர்களது அருகே ராக்ஸ்டார் அனிருத், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரும் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தனர்.
அதேபோல், இன்னொரு வரிசையில் ஜெயம் ரவி தனது குடும்பத்தினருடன் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் வந்திருந்தார். ஜெயம் ரவி, அவரது மனைவி, மகன்கள் என மொத்த குடும்பமும் மிக உற்சாகமாக போட்டியை பார்த்து ரசித்தனர். ஜெயம் ரவி குடும்பத்தில் நான்கு பேருமே சிஎஸ்கே அணியின் மஞ்சள் நிற ஜெர்ஸியை அணிந்து போட்டியை ரசித்தனர். அப்போது அவர்களுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.