டாக்கா : வங்கக் கடலில் உருவான ‘மோக்கா’ புயல், அதி தீவிரமாக மாறி, ஆசிய நாடுகளான மியான்மர் மற்றும் வங்கதேசம் இடையே நேற்று கரையை கடந்தது. இதில், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.
அதி தீவிர புயல்
வங்கக் கடலில் உருவான மோக்கா புயல், இரு தினங்களுக்கு முன் அதி தீவிர புயலாக வலுப்பெற்றது.
அந்தமான் – நிகோபரின் போர்ட் பிளேர் அருகே நிலை கொண்ட மோக்கா புயல், மியான்மர் மற்றும் வங்கதேசம் இடையேநேற்று மதியம் கரையை கடந்தது.
அப்போது, வங்கதேசத்தில் உள்ள டெக்னாப் பகுதியிலும், பவளப்பாறைகள் நிறைந்த செயின்ட் மார்ட்டின் தீவிலும் இருந்த ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மணிக்கு 210 கி.மீ., வேகத்தில் வீசிய காற்றால், அங்கிருந்த வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன.
பல இடங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள் சரிந்து விழுந்தன. புயலால் இந்த இரு பகுதிகளும் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரையை கடக்கும் போது, ஐந்து சூறாவளிக்கு இணையாக அதிக சக்தியுடன் வீசிய மோக்கா புயலால், பல இடங்களில் கன மழை, நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
தாழ்வான பகுதிகளில் 13 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால், மக்கள் வீடுகளில் முடங்கினர்.
காக்ஸ் பஜார் பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில், 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முன்னெச்சரிக்கை
கடலோர மாவட்டங்களில் மின்சாரம், இணையதள சேவைகள் பல மணி நேரம் துண்டிக்கப் பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டதால், பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகையில், ”புயலின் தீவிரம் குறித்து முன்கூட்டியே தெரிந்ததால், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
”பெருமளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவாக வீசிய புயலால், பாதிக்கப்பட்ட பகுதிகள் படிப்படியாக சீரமைக்கப்படும்,” என்றார்.
கரையை கடந்த மூன்று மணி நேரத்துக்குப் பின், மோக்கா புயல் வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இருப்பினும், பல மணி நேரத்துக்கு வங்கதேசத்தின் கடலோரப் பகுதிகளில் காற்றுடன் மழை நீடித்தது.
மியான்மர் அருகே புயல் கரையைக் கடந்ததால், அங்குள்ள சிட்வே, கியாக்பியூ, குவா பகுதிகள் பலத்த சேதமடைந்தன. வீடுகள், கட்டடங்களை சூறையாடிய புயலுக்கு, மியான்மரில் மூன்று பேர் பலியாகினர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல நகரங்கள் இருளில் மூழ்கின.
புயல் பாதித்த இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்