கென்யாவில் உலகின் வயதான சிங்கங்களில் ஒன்றான லூன்கிடோ உள்பட 10 சிங்கங்கள் கடந்த ஒரு வாரத்தில் கொல்லப்பட்டுள்ளது வன விலங்கு ஆர்வலர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “கென்யாவில் உள்ள அம்போசெலி தேசிய பூங்காவில் இருந்த வயதான சிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் ஆண் சிங்கம் லூன்கிடோ உணவுக்காக ஓல்கெலுனியேட் கிராமத்திற்கு சென்றுள்ளது. அப்போது அங்கு கால்நடைகள் மேய்ப்பவர்களால் ஈட்டியால் தாக்கப்பட்டு அச்சிங்கம் உயிரிழந்துள்ளது. அதற்கு வயது 19. கொல்லப்பட்ட சிங்கம் கென்யாவின் வயதான சிங்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கென்யாவின் வனவிலங்கு பாதுகாப்பாளரும், வைல்ட் லைஃப் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவுலா கூறும்போது, “இது மனித – வனவிலங்கு மோதலின் விளைவாகும். சிங்கம் கொல்லப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன். நாட்டில் வனவிலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
கென்யாவின் தென் பகுதியில் கடந்த வாரத்தில் மட்டும் 10 சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உணவைத் தேடும் முயற்சியில் ஊருக்குள் சென்றதால் கிராம மக்களால் கொல்லப்பட்டதாக கென்யாவின் வனத்துறை தெரிவித்துள்ளது.
சிங்கங்களின் வாழ்நாள் என்பது குறைந்த பட்சமாக 13 ஆகவும், அதிகபட்சமாக 19 ஆகவும் உள்ளது. இந்த நிலையில் ஒருவாரத்தில் 10 சிங்கங்கள் கென்யாவில் கொல்லப்பட்டுள்ளது வன விலங்கு ஆர்வலர்களிடம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.